வருட இறுதிக்குள் அரசியல் கைதிகளின் வழக்குகள் முற்றுப்பெறும்-

wijayadasa rajapakseதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாமல் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்து எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் நீதியமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக்காணும் நோக்கிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக தெரிவித்த அவர், எனினும் இதனைத்தான் செய்யப்போகின்றோம் என வரைவிலக்கணம் எதையும் இப்போது கூற முடியாது என்றார். அது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு தீர்மானம் எடுத்து எதனையும் செய்யமுடியாது என்றும் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பிலும் நீதியமைச்சர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது அவர், குறிப்பாக வழக்கு தொடரப்படாமல் உள்ள தமிழ்க் கைதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு இந்த வருட இறுதிக்குள் அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மன் நாடாளுமன்ற குழுவின் யாழ்ப்பாண விஐயம்-

sdfsdfdfdவடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டு வலி.வடக்கு உயர்பாதுப்பு வலயம் மற்றும் நலன்புரி முகாம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்து பார்வையிடும் நோக்கில் யாழ். சென்ற மேற்படி குழு ஆட்சி மாற்றத்தின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டுள்ளது. அத்துடன், மீள்குடியேறிய மக்களின் நலன்கள், தேவைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளதுடன் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கோணப்புலம் நலன்புரி முகாமிற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதன்போது தமது மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொண்டு தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று பிரச்சினைகளுக்காக மக்கள் ஆர்ப்பாட்டம்-

433வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் மும்முனைப் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் கழிவெண்ணை கலப்பால் மாசடைந்த நன்னீர்ப் பிரச்சினைக்கு தீர்வு, அமைக்கப்படவுள்ள 65000 வீட்டுத்திட்டதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும், சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டம் முற்பகல் 11.35 மணியளவில் நிறைவடைந்தது. இதில் புதிய ஜனநாயக மாக்சிச லெலினின்ச கட்சி, நவசமாஜ கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் சுன்னாகம் சனசமூக நிலையத்தாரின் ஒத்துழைப்புடன் பலரும் பங்குபற்றியதுடன் பலரும் பல கோஷங்களை எழுப்பியிருந்தனர். மேலும், பல கோஷங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதில் திருகோணமலை மாவடத்தில் இயங்கு பசுமை திருகோணமலை அமைப்பினரும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநகர ஆணையாளரின் வாகனத்திற்கு தீ வைப்பு-

ewrereமட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வதிவிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது அலுவலக வாகனத்திற்கு சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தீ வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவிக்கையில், சனிக்கிழமை அதிகாலை சுமார் 12.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தபோது இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியதாகவும் வாகனத்தின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த மேலதிக டயர் எரிந்து கொண்டிருந்தபோது தாங்கள் அணைத்ததாகவும் கூறியுள்ளார். இதேவேளை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் சொக்கோ பொலிஸார் மற்றும் பொலிஸ் தலைமையக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதியில் இருந்து பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை நிரப்பப்பட்ட நிலையில் இரண்டு போத்தல்கள் மற்றும் மிளகாய்த்தூள் பொதி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைதிகளை உள்நாட்டு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை-

jailமாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 14பேரை உள்நாட்டு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினரின் கப்பல் மூலம் கைதிகள் 14 பேரையும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களுள் அநேகமானோர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர்களுக்கு 10 முதல் 25 வருடங்கள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வரணி வாள்வெட்டில் மாணவன் உட்பட நால்வர் படுகாயம்-

cut killed (2)யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள வீதியூடாக குறித்த நால்வரும் பணித்துக்கொண்டிருக்கையில் இடைமறித்த குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் நேற்றிரவு 11 மணியவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக விவசாயபீட மேம்பாட்டுக்கு ஜப்பான் உதவி-

japanயாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்சி மற்றும் பயிற்சி நிலையங்களை உருவாக்க தேசிய பொருளாதார அமைச்சினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைக்கு உதவியாக ஜப்பான் அரசாங்கம் 2,100 மில்லியன் ஷரூபா பணத்தொகையை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண உலர் பிரதேசங்களில் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இதனூடாக அதிக எண்ணிக்கையிலான விலங்கு விஞ்ஞானம், விஞ்ஞானம், உயிரியல் விவசாயம், வேளாண்மை விவசாயம், பொறியியல் விவசாயம் மற்றும் பொருளாதார விவசாயம் போன்ற துறைகளை உருவாக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.