இலங்கையில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா கவலை

gfdfஇலங்கையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சில கவலைகள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.

அங்கு தொடர்ந்தும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்களும் துன்புறுத்தல்களை ஏதிர்கொள்ள நேரிடுகிறது எனவும்.
காரணங்கள் இன்றி ஆட்கள் தடுத்துவைக்கப்படுவது, பாலியல் பலாத்காரம், பாலியல் சார்ந்த வன்முறைகள் ஆகியவையும் இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்றுள்ளன எனவும்.
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால், அங்கு நெரிசல் மிகுந்து காணப்படுவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்பவர்களின் மனித உரிமைகள் புறந்தள்ளப்படுவது பிரச்சினைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது எனக் கூறும் அந்த அறிக்கை, பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்முறையும் கவலையளிக்கின்றன.
தொழிலாளர் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள், சிறார் தொழிலாளர் ஆகிய பிரச்சினைகளும் அங்கு உள்ளன என அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.

கடத்தப்பட்ட ‘சிபொக் பள்ளிச் சிறுமிகளின்’ புதிய காணொளி வெளியானது

chibok_girls_nigeriaநைஜீரியாவின் சிபொக் நகரிலிருந்து பெரும் எண்ணிக்கையான பள்ளிச் சிறுமிகள் கடத்திச்செல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அந்தச் சிறுமிகளில் சிலரை காண்பிப்பதாகத் தோன்றும் காணொளிப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ள இந்தக் காணொளிப் பதிவில், முழுநீள இஸ்லாமிய உடையில் 15 சிறுமிகள் தங்களின் பெயர்களைக் கூறுகின்றனர்.
இந்தக் காணொளிப் பதிவை ஆராய்ந்துவருவதாகக் கூறியுள்ள நைஜீரிய அதிகாரிகள், ஆனாலும் அது உண்மையானது என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

போக்கோ ஹராம் ஆயுதக்குழுவால் கடத்திச்செல்லப்பட்ட 200க்கும் அதிகமான பள்ளிச்சிறுமிகள் இன்னும் காணாமல்போன நிலையில் தான் உள்ளனர்.
இந்தப் புதிய காணொளி, தங்களின் பிள்ளைகள் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்ற புதிய நம்பிக்கையை அவர்களின் பெற்றோருக்கு கொடுத்துள்ளது.

பிள்ளைகள் கடத்தப்பட்ட இரண்டாண்டு நிறைவை குறிப்பதற்காக, தலைநகர் அபுஜாவில் சில பெற்றோர்கள் இன்று பேரணி ஒன்றை நடத்துகின்றனர்.
போக்கோ ஹராமின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களையும் நகரங்களையும் நைஜீரிய இராணுவத்தினர் மீளக் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களின் பிடியில் இருந்த நூற்றுக் கணக்கான பணயக் கைதிகளும் படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். ஆனால், சிபொக் சிறுமிகள் யாரும் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.