ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்

japanஜப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இதே பகுதியில் ஒரு நாள் முன்னரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.

இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர்.

கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்குமாறு கோரி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் கூறுகிறது.

இப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அதிர்வுகளில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டு முடக்கம்

vijay mallyaஇந்தியத் தொழிலதிபரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான விஜய் மல்லையாவின் ராஜதந்திர கடவுச் சீட்டை முடக்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிங்ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டு உடனடியாக நான்கு வாரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமலாக்கப் பிரிவின் ஆலோசனைக்கேற்ப அவரது ராஜதந்திர கடவுச் சீட்டை முடக்கும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு கூறினார்.

முடக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டை ஏன் கைப்பற்றக் கூடாது அல்லது ரத்து செய்யக் கூடாது என்பது தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் ஒரு வாரத்துக்குள் அவரது பதில் கிடைக்கவில்லையென்றால், வெளியுறவு அமைச்சகம் அவரது கடவுச் சீட்டை ரத்துசெய்யும் நடவடிக்கையை எடுக்கும் எனவும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பல வங்கிகளிடமிருந்து சுமார் 9,000 கோடி ரூபாயைக் கடனாக வாங்கியுள்ள மல்லைய்யாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், அந்தக் கடன்களை இதுவரை அடைக்கவில்லை. எனவே அந்தக் கடன்களை வசூல்செய்யும் நடவடிக்கையில் இறங்கிய வங்கிகள் அவர் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இடைக்கால நடவடிக்கையாக அவர் சுமார் 4,000 கோடி ரூபாய்களை கட்ட முன்வந்ததை, வங்கிகள் நிராகரித்தன.

இந்தியா, மியான்மரில் தாக்குதல் நடத்த ஐஎஸ் திட்டம்

afghan_isisவங்கதேசத்தில் நன்றாக நிலைகொண்ட பிறகு இந்தியாவிலும் மியான்மரிலும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழு திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் வங்கதேச பிரிவின் தலைவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
 
இந்தியாவில் பெரும் தாக்குதலை நடத்துவோம் என ஐஎஸ் அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அந்த அமைப்பின் பத்திரிகையான தபீக்கிற்கு அளித்த பேட்டியிலேயே இந்தத் தகவலை வங்கதேசப் பிரிவின் தலைவரான ஷாயிக் அபு – இப்ராஹிம் அல் – ஹனீஃப் தெரிவித்திருக்கிறார். Read more