வடக்கில் வெடிகுண்டுகளை நீக்க அமெரிக்கா பயிற்சி-

minesஇலங்கை கடற்படையின் நீச்சல் குழுவினரும் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் மொபைல் பிரிவும் இணைந்து பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடற்படை நீச்சல்குழுவின் 22 பேர் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி இதில் பங்கேற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டு சென்று இதுவரை வெடிக்காதிருக்கும் குண்டுகள் மற்றும் ஏனைய யுத்த உபகரணங்களை நீக்குவதற்காக விஷேட பயிற்சியை வழங்குவது இப்பயிற்சியின் நோக்கமாகும். 10 நாட்கள் இடம்பெறும் இப்பயிற்சி வேலைத் திட்டத்திற்கு கொள்கை மற்றும் நடைமுறை செயற்பாடுகள் பல உள்ளடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து 146 விண்ணப்பங்கள்-

swissஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து 146 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுவிஸர்லாந்தின் அரச செயலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் மாத்திரமே இந்த விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுவிஸர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 8315 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இதுவரையில் கிடைத்துள்ள புகலிடக் கோரிகை விண்ணப்பங்களில் 45 வீதத்தால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுவிஸர்லாந்தின் அரச செயலகம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

களுவாஞ்சிக்குடியில் கிராம உத்தியோகத்தர் கொலை-

murderமட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, சிவபுரம் பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிவபுரம் பகுதியிலிருந்து மற்றுமொருவருடன் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்து இருவரால் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கிராம உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்புறமாக அமர்ந்து பயணித்த மற்றைய நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒத்தாச்சி மடம் கிராம உத்தியோகத்தரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் கண்ட சிலரின் சாட்சியத்தின் அடிப்படையில் 22 மற்றும் 24 வயதான சிவபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்களை களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.