தாயகம் திரும்பியோர் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்-

refugeesஇந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய பலர் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பி மீள்குடியேறியுள்ளவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பலர் இந்தியாவில் குடியேறி பல வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது, அரசாங்கத்தின் அறிவித்தலை ஏற்று நாடு திரும்புகின்றனர். இவ்வாறு நாடு திரும்புபவர்களில் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அங்கு திருமணம் செய்தவர்களாகவும் உள்ளனர். நாடு திரும்பும் இவர்களிடம் இலங்கை பிரஜாவுரிமையை பெற அரசு பல்வேறு தகவல்களை கோருவதால், அதனை வழங்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். அத்துடன், பிரஜாவுரிமையைப் பெற 25,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக தாம் தொழில் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், அடையாள அட்டை பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே, இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் பிரஜாவுரிமையை பெற இந்த அரசாங்கம் கையாளப்படும் வழிமுறைகளை இலகுபடுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் இலங்கையர் அங்கு தங்கி இருந்தமைக்கான பதிவுகளின் அசல் பிரதிகள் வேண்டுமென கோரப்படுகின்றது. ஆனால் அங்கிருந்து வரும்போது அசல் பிரதிகள் மீளப்பெறப்பட்டு நகல் பிரதிகளை மாத்திரமே கொண்டுவர அனுமதிக்கப்படுகின்றது.

மன்னார் விபத்தில் பெந்தகொஸ்து சபை போதகர் உயிரிழப்பு-

tryyyயாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் விபத்துக்களானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த இலங்கை பெந்தகோஸ்து சபையின் போதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது, இலங்கை பெந்தகோஸ்து சபைக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் மன்னார் தள்ளாடி பிரதேசத்தில் காணப்படும் விமானப்படை தளத்திலேயே விபத்துக்ககுள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த விபத்தின் போது, தாவீது ராஜா(வயது-58) என்றே போதகரே உயிரிழந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை பெந்தகோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான போதகர் தாவீது ராஜா தலைமையில் இரண்டு அருட்சகோதரர்கள் மற்றும் ஆறு அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 9 பேர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற நிலையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதன்போது, மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப்படை தள பிரதேசத்தில் வைத்து குறித்த ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சிக்கு புதிய நீதவான் நியமனம்-

courts (1)கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற புதிய நீதவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நீதவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதவானாக ஏ.ஏ. ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நீதவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கல்விகற்று அண்மையில் நாடு திரும்பியவராவார்.