வவுனியா நகர சபை பெரியார்களின் சிலை பராமரிப்புடன், அவர்களின் நினைவு தினங்களையும் நினைவுகூர வேண்டும்-முன்னாள் உப நகர பிதா-
தமிழையும் சைவத்தையும் வளர்த்த பெரியார்களின் 10 சிலைகளையும் ஒரே நாளில் நிறுவும்போது ஏற்பட்ட பெருமையும் கௌரவமும் இன்று கேள்விக்குறியாகின்ற நிலைமையினை நகரசபை செய்யக்கூடாது என இன்று நடைபெற்ற இளங்கோ அடிகளாரின் நினைவுதினத்தில் உரையாற்றிய புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரியார்களின் சிலைகளை நாம் அந்த பகுதிகளின் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பாடசாலைகள் மற்றும் கோவில் நிர்வாகங்களின் பராமரிப்பில் கையளித்தோம் ஆனால் இன்று நகரசபை அவர்களிடமும் வழங்கவில்லை. தாங்களும் பாராமுகமாக செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது. வருமானம் வருகின்ற நிலையங்களை தங்களின் நிர்வாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் நகரசபை, எமது கலாச்சாரத்தின் சின்னங்களாக நகரமெங்கும் மிளிர்ந்து காணப்படும் பெரியார்களின் சிலைகளை அவர்களின் நினைவு தினத்திலாவது தூய்மைப்படுத்தி மக்களின், மாணவர்களின் பங்களிப்போடு கௌரவப்படுத்த வேண்டியது நகரசபையின் கடமை. நகரசபைக்கு உட்பட்ட மயானங்கள், தாய்சேய் பராமரிப்பு நிலையங்கள், பொது நூல் நிலையம், பொதுப் பூங்கா மற்றும் நகரசபைக்கு கையளிக்கப்பட்ட கட்டிடங்கள் என்பவற்றின் பெறுமதியும் பயனும் கருதி அவற்றினை உரிய வகையில் பாதுகாக்க வேண்டியதுடன், மக்களின் பணத்தில் இயங்கும் நகரசபை மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற கூடிய சூழ்நிலையை முன்னெடுக்க வேண்டும் எனவும், மக்கள் சேவையில் மகிழ்ச்சி காணுவோம் என மகுடத்தை உருவாக்கிய நாங்களும் எமது அமைப்பும் என்றும் நகரசபையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்போம் எனவும் கூறினார்.
யாழில் மே மாதம் 3000 வீட்டுத் திட்டம் ஆரம்பம்-
யாழ். மாவட்டத்திற்கு 39 ஆயிரம் வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும், முதற்கட்டமாக மூவாயிரம் வீட்டுத்திட்ட வேலைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி பயனாளிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறித்த வீடுகள் வழங்கப்படும். அத்துடன், யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்திற்கு அமைவாக பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள். சுமார் 8 இலட்சம் பெறுமதியான புதிய கல் வீடுகளை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மூவாயிரம் வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதேவேளை, பயனாளிகள் தெரிவில் குறைகள் இருப்பின் பிரதேச செயலாளர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், எதிர்வரும் மே மாதத்திற்குள் மூவாயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.