சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை- சிறீலங்கா சுதந்திரக் கட்சி-

mahinda samarasingheஇலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை பற்றி பேச்சு நடத்துவதற்கு கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. ஃபெடரல் ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அதனால், நாம் வென்றெடுத்துள்ள அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்திரமற்ற நிலைக்குத் தான் செல்லும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கி நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களை வழங்குவது பற்றி பேச்சு நடத்தினாலும் சமஷ்டி முறைக்கு ஒருபோதும் தமது கட்சி ஒத்துழைப்பு அளிக்காது என்றும் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். மாகாண சபைகள் தேவையானால் தீர்மானங்களை நிறைவேற்றி இங்கு அனுப்ப முடியும். ஆனால், எமது தரப்பிலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் கிடைக்காது. வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கும் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என்று அரசாங்கத்தின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக உள்ள மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுவீடன் தூதரகத்தை அமைக்குமாறு கோரிக்கை-

swedenசுவீடன் தூதரகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென சிவில் சமூகத்தினர் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த விஜயத்தின்போது, யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்த சந்திப்பின் போது, முன்னைய காலத்தில் சுவீடன் தூதரகத்தினால் பல நன்மைகள் பெற்றுக்கொண்டதன் காரணத்தினால், இங்கு தூதரகம் அமைப்பது பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன், யாழ். மாவட்ட தண்ணீர்ப் பிரச்சினைகள் மற்றும் போரின் பின் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், உட்பட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர், சிவில் சமூகத்தின் கருத்துக்களை தான் பெறுமதி மிக்கதாக ஏற்றுக்கொண்டு, தனது பலத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை, உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு-

kenany universityகளனிப் பல்கலைக்கழகத்தை ஒரு வாரமளவில் தற்காலிகமாக மூட, பல்கலைக்கழக நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பிரதான வைத்திய அதிகாரிகள் மற்றும் களனி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அறிவுரைப்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக விடுதியில் பரவிய ஒருவகை நோயே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. இதன்படி, இன்று முதல் மே மாதம் 3ம் திகதி வரை பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளதோடு, மே மாதம் 04ம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பல்கலைக்கழக உபவேந்தர், மூத்த பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார கூறியுள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக விடுதியிலுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 05.00 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சபாநாயகர் எம்.எச் மொஹமட் காலமானார்-

mohamedமுன்னாள் சபாநாயகரும், அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச் மொஹமட் தனது 95 ஆம் வயதில் இன்று காலமானார். கொழும்பு மாநகர சபையூடாக அரசியலில் பிரவேசித்த அவர் மாநகர சபையின் மேயராகவும் பதவிவகித்துள்ளார். பின்னர் பாராளுமன்றத்திற்கு தெரிவான எம்.எச்.மொஹமட், டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தில், தொழில் மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். மேலும் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்த எம்.எச்.மொஹமட் பாராளுமன்றத்தின் 14 ஆவது சபாநாயகராக செயற்பட்டார். பொரளை பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அன்னாரின் வீட்டில் ஜனாசா வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.