புதுக்குடியிருப்பில் காணி அபகரிக்கும் நில அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது-

puthukudiyiruppuமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரின் தேவைக்காக காணிகள் அபகரிக்கும் நிலஅளவை செயற்பாடுகளை பொதுமக்கள் பாரளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாலுள்ள மக்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் காணியை அபகரிப்பதற்காக நிலஅளவை செயற்பாடுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்விடத்தில் கூடிய பொதுமக்கள் குறித்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், அன்டனி ஜெகநாதன் உள்ளிட்டோரும் இணைந்து படையதிகாரிகளுடன் நிலஅளவை அதிகாரிகளுடனும் சுமுகமாக பேசி அளவீடு நடவடிக்கையினை நிறுத்தியுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், நாயாறு உள்ளிட்ட பிரதேசங்களில் படையினரின் தேவைக்காக நேற்று முதல் காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்களும் அரசியற் கட்சிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது-

sivakaranஇலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் இன்று பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சிவகரனை கைதுசெய்ய வந்த அதிகாரிகள் துண்டு ஆவணமொன்றை வழங்கியுள்ளனர். குறித்த துண்டில், ‘பாதுகாப்பு அமைச்சின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ், அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகரனை கைதுசெய்ததற்கான காரணம் எதையும் அதிகாரிகள் சொல்லவில்லை. கைதுசெய்யப்பட்ட சிவகரன், வவுனியா பயங்கரவாத விசாரனை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழீழ வைப்பக நகைகளை தேடி வேட்டை-

wer4weவிடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகளை தேடி, புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் தோண்டும் பணி, நேற்று மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கேப்பாபுலவு வீதியிலுள்ள லூத்மாதா சந்தியில் இயங்கிய தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை, அதற்கு முன்னாள் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் இருந்த மண் கிணற்றுக்குள் போட்டு, மூடியதாக தமிழீழ வைப்பகத்தில் கடமையாற்றிய உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். அதனை முல்லைத்தீவு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், நீதவானின் நேரடி பிரசன்னதுடன் தோண்டும் பணிகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சரியான இடத்தை தெரிவு செய்வதில் இருக்கும் சிக்கல் நிலையால் 1 ஏக்கர் அளவிலான இடம் தெரிவுசெய்யப்பட்டு, அதற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த தோண்டும் பணிகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர். நேற்று இரவு நிறுத்தப்பட்ட தோண்டும் பணிகள் மீண்டும் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பந்தன் பதவிவிலக வேண்டுமென கோரி சத்தியாக்கிரகப் போராட்டம்-

45665இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு இன்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியானவர் இல்லை, இவர் உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்கள். கடந்த 16ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர், பரவிப்பாஞ்சானில் உள்ள கஜபா படைப்பிரிவின் தலைமையக இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர் எனவும், இதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். தற்போது நாட்டில் தமிழ் மக்கள் எந்த இடையூறுகளும் இன்றி நிம்மதியாக வாழுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த சுதந்திரமும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சத்தியாகிரக போராட்டத்தில் சரத் மனமேந்திர, பத்தரமுல்லே சீலரத்தின தேரர் உட்பட மேலும் முக்கியமான ஏழு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மனுஸ் தீவு தடுப்புமுகாம் அரசியலமைப்பிற்கு முரணானது-நீதிமன்றம்-

manus island campஅகதிகளையும், தஞ்சக் கோரிக்கையாளர்களையும் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ளது அரசியலமைப்பிற்கு முரணானது என்று பப்புவா நியூகினியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத குடியேறிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தவிர அனைவரினதும் தனிப்பட்ட சுதந்திரத்தை பப்புவா நியூ கினியின் அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கடல் பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நாட்டிற்கு வெளியே வைத்து விசாரிக்கும் அவுஸ்திரேலியாவின் கொள்கையின் கீழ் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து அவுஸ்திரேலியா பரிசீலித்து வருகிறது. சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதை முடிவிற்கு கொண்டுவர தேவையான நடைமுறைகளை பின்பற்றுமாறு பாப்புவா நியூகினி மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அரசாங்கங்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மனுஸ் தீவில் கிட்டத்தட்ட 850 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுனர். அனைவரும் ஆண்கள். தஞ்சக் கோரிக்கையாளர்களும் அகதிகளும் தாமாக முன்வந்து பப்புவா நியூ கினிவிற்குள் வந்திராத ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டினுள் சட்விரோதமாக வந்தவர்கள் என பார்க்க முடியாது என நீதிபதிகள் குழு அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. பாப்புவா நியூ கினி நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவுஸ்திரேலிய குடிவரவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நகுலனிடம் தொடர் விசாரணை, கலையரசன் என்கிற அறிவழகன் கைது-

nagulan LTTEகைது செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் கட்டளையிடும் அதிகாரியாக இருந்த கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்றழைக்கப்படும் நகுலனிடம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் கோப்பாயில் வைத்து அவர், நேற்றுமாலை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான ராம் என்கிற இதிமலசிங்கம் அரிச்சந்திரன் வழங்கிய தகவல்களையடுத்து நகுலன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்றழைக்கப்படும் நகுலன் இறுதி யுத்த காலத்தில் நாட்டிலிருந்து தப்பிச் சென்று பின்னர் புதுமாத்தலன் பிரதேசத்திற்கு வருகை தந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் நலன்புரி முகாமில் சில ஆண்டுகள் இரகசியமான முறையில் வாழ்ந்துள்ளதுடன், அங்கு இவர் திருமணம் முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை புலிகளின் முன்னாள் திருகோணமலை புலனாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் என்றழைக்கப்படும் அறிவழகன் திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து நேற்றுக்காலை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த 2009ம் ஆண்டு அம்பாறை மாவட்ட தளபதி ராம் என்பவருடன் திருகோணமலையில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் 2013ம் ஆண்டு விடுதலையாகி வந்து உறவினருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து நேற்றுக்காலை திருகொணமலை நகர் அரசடிப்பகுதியில் வைத்து கைதுசெய்து விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை முன்னாள் விடுதலைப் புலிகளின் ராம் மற்றும் நகுலனைத் தொடர்ந்து கலையரசன் கைது செய்யப்பட்டதையடுத்து புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப்புலிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த நகுலன் பயங்கரவாதத் குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைதானது தொடர்பில் இலங்கை மனித உரிமைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் அவரது மனைவியினால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.