உலக பாட்டாளி மக்கள் தினம் -2016

Captureஇன்றைய நாள் உலக பாட்டாளி வர்க்கத்தின் வெற்றித் திருநாள், சிந்திய வியர்வைத் துளிகளுக்கு பெருமை கிடைத்த உலக வரலாற்று பெருமைமிக்க நாள். ஒவ்வோர் தொழிலாளர்கள் கைகளிலும் இவ் உலகின் உயர்ச்சி தங்கியுள்ளது என்பதனை நிறுவும் நாள். இவ் நாளில் ஒவ்வோர்வரும் பாட்டாளி வர்க்கத்தினரும் அணிசேர்த்து அவர்கள் தம் பெருமையினையும் புகழினையும் உலகறியச் செய்ய முயற்சிக்க வேண்டும். இவ் வகையில் இவ் இலங்கைத் தீவிலும் தமிழ் தேசியத்தின் வழி நின்று வன்கொடுமைகளாலும், வன் கொடூரங்களாலும் அவலப்பட்டு வடுக்கள் மாறாத நிலையில் வாழ்ந்து வரும் எம் தொழிலாளர் வர்க்கத்திற்கு உயிர்ப்பூட்டி அவர்கள் எதிர்கால நம்பிக்கைகளோடு வாழ வழி ஏற்படுத்திட வேண்டும். கடந்துவிட்ட காலங்களில் எங்கள் வரலாறுகள் தந்த பல அனுபவங்களை வழிகாட்டியாக கொண்டு நிகழ்காலத்தினை வழி நடாத்துவதோடு எதிர்காலத்தினையும் செம்மைப்படுத்த முயல வேண்டும்.

விளைந்து மகிழ்ந்த எம் விளை நிலங்களில் மீண்டும் விளைவுகண்டு மகிழ்ந்திடவும், அலை அன்னைமீதினில் நிலவு வழிகாட்டிட வீசிய வலைகள் மீண்டும் விளைவை தந்திடவும், அழிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட முல்லைகளில் மீண்டும் செழித்து சிறந்திடவும், கபளீகரம் செய்யப்பட்ட எம்மவர் நிலங்கள் மீண்டு வந்திடவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர் துளிகளுக்கு மீட்சி கிடைத்திடவும், சிறைகளில் விடுதலைக்கு ஏங்கி நிற்கும் உள்ளங்களுக்கு உரிய பதில் கிடைத்திடவும், பெண் கொடுமைகளுக்கு முற்று வைத்திடவும், சுரண்டப்பட்டு சூறையாடப்பட்ட மற்றும் சூறையாடப்பட்டு வரும் எம் தொழிலாளரின் உழைப்பிற்கு உரிய தீர்வு கண்டிடவும், நாட்டின் நல்லாட்சி உறுதிப்பட்டிடவும், எம் இன இலட்சியம் நிறைவு கண்டிடவும் அனைவரும் நாம் தமிழர்கள் என்ற இன ஒற்றுமையால் உறுதி கொண்டு இவ் நாளில் எம் கோசங்களை வானுயர உயர்த்துவோம். என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்,

திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன்,
முன்னாள் தவிசாளர்,
வலி மேற்கு பிரதேச சபை
(தமிழ் தேசிய கூட்டமைப்பு)