முன்னாள் போராளிகளது கைது நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது-பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்- (ரி.விரூஷன்)

D.Sithadthan M.P,.புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீளவும் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் அண்மைக் காலமாக கைதுசெய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளானது கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதைப் போன்றே காணப்படுகின்றது.

புதிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் வாக்களித்ததன் காரணம், தமக்கு கடந்த ஆட்சிக் காலத்திலிருந்த நிம்மதியற்ற வாழ்க்கை நீங்கி சுமுகமான நல்வாழ்க்கை கிடைக்குமென்ற நம்பிக்கையில்தான். ஆனால் தற்போதைய அரச ஆட்சியில் இடம்பெறுகின்ற இக் கைதுகளால் மக்களிடையே பொதுவான ஓர் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இவை பழைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஞாபகப்படுத்துவதாகவே உள்ளன. இக் கைது நடவடிக்கைகள், கடத்தல் செயற்பாடுகள் போன்றே இடம்பெற்று வருவதைக் காணமுடிகின்றது. எனவே அரசாங்கம் மக்களுக்கு ஏன் இக் கைதுகள் இடம்பெறுகின்றன?

அவற்றின் உண்மை என்ன என்பதனை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான கைதுகளை தொடர்ச்சியாக இடம்பெறாது தடுக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார். (நன்றி – வீரகேசரி 29.04.2016)