சர்வதேச ஊடக தினம் யாழில் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)
சர்வதேச ஊடக தினம் நேற்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. உதயன் குழுமத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஊடக தின ஆரம்ப நிகழ்வாக மரணித்த ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ். பண்ணைக் கடற்கரையில் மரம் நாட்டுதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் மரணித்த 13ஊடகவியலாளர்களின் உருவப்படங்களுக்கும் மலராஞ்சலி செலுத்தி நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட மௌனாஞ்சலியும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஆகியோரும், மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், எஸ். சுகிர்தன், ஆனோல்ட் ஆகியோரும்; மேலும் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.