பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-

parliamentபாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பாலித்த தேவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய, உயரிய ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் கூச்சலிட்டமையால், பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதேவேளை, இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால் அதனை இன்றுவரை ஒத்திவைப்பதாகவும், இந்த சம்பவத்தை தான் கண்டிப்பதாகவும் சபாநாயகர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதனுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூரியவால் குழுவொன்று அமைக்கப்பட்டது. குறித்த குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கண்காணிப்புக்களும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன மற்றும் பியல் நிஷாந்த ஆகியோர் பாராளுமன்ற தலைமைக்கு செவிமடுக்காது, அபத்தமாக தலைமை மீது குற்றம்சாட்டுவதாக அதில் காணப்படும் கண்காணிப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த அறிக்கையில் முதலாவது பரிந்துரையாக இரு தரப்பிலும் இருந்து, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த கட்சியோ, சுயாதீனக் குழுகளோ அல்லது அதன் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். பாராளுமன்ற தலைமையை தரக்குறைவான முறையில் குற்றம்சாட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நேற்று குழப்பநிலை வலுக்கக் காரணமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாலித்த தேவரப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய, உயரிய ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த அறிக்கையை ஆரம்ப அறிக்கையாக கொண்டு செயற்படுத்தல் மற்றும் பாராளுமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய அல்லது அபத்தமான முறையில் செயற்பட்ட உறுப்பினர்கள் குறித்து பல வழிகளில் ஆராய்ந்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க போதுமான காலத்தை வழங்க வேண்டும் என பல்வேறு பரிந்துரைகளும் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.