தமிழ் மக்கள் பேரவையின் வரைபு நோர்வேயிடம் கையளிப்பு-

peravaiதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு உத்தியோகபூர்வமாக இன்று நோர்வே அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பேரவையின் செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரால் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஷொப்ஜோர்ன் கோஸ்டாட்செசரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது, நோர்வேயின் சமாதான மத்தியஸ்தம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் தமிழ் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு குறித்து தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களால் இதன்போது நோர்வே தூதருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான இறுதித் தீர்வினைப் பெற்றுத்தரவும், இறுதி யுத்தத்தில் அரங்கேறிய மனிதப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தார்மீகப் பொறுப்பும் நோர்வே நாட்டிற்கு உள்ளதாக தமது பிரதிநிதிகள் எடுத்துக்கூறியதாக தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய குரல் எழுப்புதலுக்கு இம்முறை தமிழ் மக்கள் பக்கம் சார்ந்து நின்று, சர்வதேச விசாரணைக்கான தமது குரலைப் பலப்படுத்துமாறும் தமிழ் மக்கள் பேரவை நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.