வடக்கு சமஷ்டி யோசனைக்கு மேல் மாகாண சபை எதிர்ப்பு-

peravaiவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகவும், ஏனைய மாகாணங்கள் ஏழையும் இணைத்து சிங்கள மொழியை அடிப்படையாகக் கொண்ட வேறு பிராந்தியமாகவும் நிர்வகிக்கவேண்டும் என்று வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்தை, மேல் மாகாண சபை ஏகமனதாக நிராகரித்துள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஒன்றிணைந்து, அவைக்கு நடுவே நேற்று அமர்ந்திருந்து, வடமாகாண சபையின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க, இந்த நிராகரிப்பு யோசனையை முன்வைத்தார். அதனை, ஐ.தே.கட்சி உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா வழிமொழிந்தார்.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்-

aarpattam (2)நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பல வருடங்களாக ஊதியமின்றி பணியாற்றிவரும் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், நிரந்தர நியமனம் கோரி 11ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர் ஆசிரியர்கள், ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகள் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனையடுத்து மீண்டும் மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக சென்ற கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.