Header image alt text

இலங்கைத் தயாரிப்பு கப்பல்கள் வெளிநாட்டிற்கு விற்பனை-

sri lanka shipஇலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒன்பது கடற்பாதுகாப்பு கப்பல்கள் முதன் முறையாக நைஜீரியா நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடலோரக் காவல்படை கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. வெளிநாடொன்றிற்கு இலங்கையின் கப்பல்கள் விற்பனை செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இதன்மூலம் பெறப்பட்ட வருமானம் சுமார் 60 கோடிகள் என்று கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல்களை கொள்வனவு செய்யும்போது நைஜீரிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையிலுள்ள நைஜீரிய நாட்டின் தூதுவர் எஸ்.யூ. அஹமட் கலந்து கொண்டிருந்தார். 1994ம் ஆண்டில் இருந்து அப்போதைய தேவைகளுக்கு ஏற்ப இருந்த கேள்விகளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் சிறிய ரக கப்பல்கள் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இறுதி யுத்த காலத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக இந்தப் கப்பல்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் மரணம், ரயிலில் பயணித்த மாணவன் படுகாயம்-

5466565கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18) ஆகிய இரு இளைஞர்கள், இன்று உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை ரயிலில் நேற்று பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வெளியில் எட்டிப் பார்த்தபோது, மின்கம்பத்துடன் முகம் அடிபட்டதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தாரக டுலாஜ் எனற மாணவனே படுகாயமடைந்தவராவார். காங்கேசன்துறை தல்சேவன விருந்தினர் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, நண்பர்களுடன் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார மையம் அமைப்பது தொடர்பில் வவுனியாவில் அமைதிப் பேரணி-

4577677மத்திய அரசின் கிராமிய பொருளாதார அமைச்சினால் வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மையத்தை தாண்டிக்குளம் விவசாய பண்ணையின் பயன்படுத்தப்படாத காணியில் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் இன்று அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதிப் பேரணியில், அபிவிருத்தியில் அரசியல் கலக்காதே, வலியவரும் வாய்ப்பை நழுவ விடாதே, மத்தியா மாகாணமா இதுவல்ல எமது பிரச்சனை மாவட்டத்தின் அபிவிருத்தியே, சந்தை வாய்ப்பில்லாமல் நாம் படும் துன்பம் தெரியுமா, தரவில்லை என்று குறை கூறாமல் தந்ததை பயன்படுத்து, வேண்டாம் வேண்டாம் பொய்யான அறிக்கைகள் வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

வவுனியா வாகன விபத்தில் 21 கடற்படையினர் காயம்-

ertrtrrttrrrrவவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் வேகக் கட்டுபாட்டை இழந்த பஸ் ஒன்று பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.

மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி விடுமுறையில் சென்று கொண்டிருந்த கடற்படையினரை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்களில் ஒன்றே அங்கிருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு பாலத்தினுள் வீழ்ந்துள்ளது. காயமடைந்த கடற்படையினர் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணைக்குழு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு-

namalமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை விசாரணைக்கு வரும்படி பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி நாமல் ராஜபக்ச குறித்த ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகவுள்ளார். சிவில் விமான போக்குவரத்துக்கான கொடுப்பனவாக 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. இந்த விமானக் கட்டணம் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்துக்குரியது எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுக திறப்பு நிகழ்வில் செலவு செய்யப்பட்ட அரச நிதி தொடர்பாகவும் நாமல் எம்.பியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சியில் 2,792 மாற்றுவலுவுடையோர் இருப்பதாக புள்ளிவிபரம்-

erreகிளிநொச்சி மாவட்டத்தில் 2,792 மாற்றுவலுவுடையோரும் 12,756 முதியோரும் இருப்பதாக மாவட்ட செயலக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2,792 மாற்றுத்திறனாளிகளும் 12,756 முதியோரும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 1,434 மாற்றுத் திறனாளிகளும் 8,560 முதியோரும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 250 மாற்றுத் திறனாளிகளும் 2,661 முதியோரும் பூநகரிப் பிரதேச செயலர் பிரிவில் 516 மாற்றுத் திறனாளிகளும், 578 முதியோரும், கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 592 மாற்றுத் திறனாளிகளும், 957 முதியோரும் என உள்ளதாக இத்தகவல் மேலும் கூறுகின்றது.

பொது மன்னிப்பு காலத்தில் 423 துப்பாக்கிகள் ஒப்படைப்பு-

trttttபொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் இதுவரை 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயன்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கடந்த 25ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என அமைச்சு அறிவித்திருந்தது. பொது மன்னிப்புக் காலத்தில் ஒப்படைக்கப்படாத ஆயுதங்கள் அதன் பின்னர் அபகரிக்கப்படுவதுடன் அதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. Read more

இலங்கைக்கான ஐ. நா. வதிவிடப் பிரதிநிதிக்கும் தமிழ் மக்கள் பேரவை அரசியற் குழுவுக்கும் இடையில் நீண்ட சந்திப்பு-

UN 02இலங்கைக்கான ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோளி ((Ms. Una McCauley) அவர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை அரசியல் விவகார உபகுழு உறுப்பினர்களுக்கும் இடையிலான நீண்ட சந்திப்பு ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பில் இருக்கும் ஐ. நா. வளாகத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் விவகார உபகுழுவின் சார்பில் அலன் சத்தியதாஸ், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், திருச்சிற்றம்பலம் பரந்தாமன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பில் இரு பகுதியினரும் பல விடயங்களை மிகவும் வெளிப்படையாகப் பேசினர். இதன் போது இலங்கைத்தீவின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சர்வதேசம் தற்போதைய இலங்கை அரசை பலப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல்களில் பொறுமை காத்தல் என்ற கோணத்தில் செயற்படுவதும் அதில் ஐ. நா. இன் நடுநிலைத்தன்மையும் பேரவையினரிற்கு எடுத்துக்கூறப்பட்டது.

ஐ. நா. இன் நடுநிலைத்தன்மையை ஏற்றுக்கொண்ட பேரவையினர், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு, போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலும் அதற்கான ஒர் நீதியான விசாரணையின் அவசியத்தையும் எடுத்துக்கூறி, இதற்கு ஏன் ஒர் சர்வதேச விசாரணையை தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள் என்பதை வரலாற்றுப் படிப்பினையின் அடிப்படையில் விரிவாக தெளிவுபடுத்தியதுடன், தமிழர்கள் இலங்கையில் கொளரவமாக சமவுரிமையுடன் வாழ்வதற்காக தமிழர்களின் பொறுமையின் வரலாற்றையும், தெளிவுபடுத்தி, நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் என்பது பொறுப்புக்கூறலிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினர். மேலும், பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான உபகுழுவின் செயற்திட்டங்களும் விரிவாக விளக்கப்பட்டது.

இச்சத்திப்பின் முடிவில் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.