இலங்கைக்கான ஐ. நா. வதிவிடப் பிரதிநிதிக்கும் தமிழ் மக்கள் பேரவை அரசியற் குழுவுக்கும் இடையில் நீண்ட சந்திப்பு-

UN 02இலங்கைக்கான ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோளி ((Ms. Una McCauley) அவர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை அரசியல் விவகார உபகுழு உறுப்பினர்களுக்கும் இடையிலான நீண்ட சந்திப்பு ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பில் இருக்கும் ஐ. நா. வளாகத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் விவகார உபகுழுவின் சார்பில் அலன் சத்தியதாஸ், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், திருச்சிற்றம்பலம் பரந்தாமன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பில் இரு பகுதியினரும் பல விடயங்களை மிகவும் வெளிப்படையாகப் பேசினர். இதன் போது இலங்கைத்தீவின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சர்வதேசம் தற்போதைய இலங்கை அரசை பலப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல்களில் பொறுமை காத்தல் என்ற கோணத்தில் செயற்படுவதும் அதில் ஐ. நா. இன் நடுநிலைத்தன்மையும் பேரவையினரிற்கு எடுத்துக்கூறப்பட்டது.

ஐ. நா. இன் நடுநிலைத்தன்மையை ஏற்றுக்கொண்ட பேரவையினர், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு, போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலும் அதற்கான ஒர் நீதியான விசாரணையின் அவசியத்தையும் எடுத்துக்கூறி, இதற்கு ஏன் ஒர் சர்வதேச விசாரணையை தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள் என்பதை வரலாற்றுப் படிப்பினையின் அடிப்படையில் விரிவாக தெளிவுபடுத்தியதுடன், தமிழர்கள் இலங்கையில் கொளரவமாக சமவுரிமையுடன் வாழ்வதற்காக தமிழர்களின் பொறுமையின் வரலாற்றையும், தெளிவுபடுத்தி, நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் என்பது பொறுப்புக்கூறலிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினர். மேலும், பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான உபகுழுவின் செயற்திட்டங்களும் விரிவாக விளக்கப்பட்டது.

இச்சத்திப்பின் முடிவில் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.