அதிரடிப்படையை களத்தில் இறக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு-

ilancheliyanயாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிரடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது, யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறு நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களாகிய அராலி, வட்டுக்கோட்டை, சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய் போன்ற இடங்களில் விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்வதற்கு விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தந்தப் பிரதேச பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயம்-

maithripala3பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமஷரூனின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி, லண்டன் நகரில் இடம்பெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரித்தானியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்ததும் ஜனாதிபதி, இந்தியா செல்லவுள்ளார்.

அங்கு மத்திய பிரதேசத்திலுள்ள இந்து ஆலயத்தில் நடைபெறும் கும்பமேள சமய வைபத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் மற்றும் யோசித்தவிடம் வாக்குமூலம் பதிவு-

namalமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ச மற்றும் யோசித்த ராஜபக்ஷ ஆகியோரிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்து சேர்த்தல் தொடர்பான குற்றச்சாட்டில் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தார். கடந்த தேர்தல் காலப் பகுதியில் விமானங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனைத் தீர்ப்பின் வழக்குப் புத்தகம் மாயம்-

courtsகொழும்பு மாநகர சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகேயை, சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், மரணதண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்ட வழக்குப்புத்தகம் மாயமாகிவிட்டதாக கூறப்படுகின்றது.

1986ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதியோ அல்லது அதனை அண்மித்த நாளொன்றிலோ, சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த டபிள்யூ. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர், 22 வருடங்களுக்குப் பின்னர், கடந்த சனிக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டார். கருணாரத்ன லியனகே, தனது வீட்டு விறாந்தையில் படுத்திருந்தபோதே, சந்தேகநபர் அவரைச் சுட்டுக்கொன்று விட்டுத் தலைமறைவாகியிருந்தார். பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, 1994ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதியன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 22 வருடங்களுக்கு பின்னர், புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட அவர், நீதவானின் உத்தரவின் பேரில் நேற்று வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்குப்புத்தகம் இல்லாமையினால், மரணத்தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பை அறிவிப்பதனை ஒத்திவைத்து, சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக, வழக்குப் புத்தகத்தை உடனடியாக முன்னிலைப்படுத்துமாறு மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட சந்தேகநபரான இவர் உள்ளிட்ட இன்னும் இருவருக்கும், அன்று மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. இதிலிருவர், மேன்முறையீடு செய்ததில் விடுதலையாகினர். இவருக்கு மட்டுமே மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார். எனினும், பிரதிவாதி இல்லாமல் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டதுடன், அவருக்குத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.