வித்தியா கொலை வழக்கு, மரபணு அறிக்கை சமர்ப்பிப்பு-

weeweeewபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாகக் கருதப்பட்ட மரபணுப் (டி.என்.ஏ) பரிசோதனை அறிக்கை, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கு தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 பேரில், பத்து பேரது வழக்கு தனியாகவும், ஏனைய இருவரதும் வழக்கு தனியாகவுமே இதுவரை காலமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. எனினும், இன்று இவ்விரு வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு, ஒரு வழக்காகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மிக நீண்டகாலமாக மன்றில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, அப்பரிசோதனைகளை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனத்தினால், குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அவ்வறிக்கை, நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு-

unnamedதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நினைவேந்தல் நிகழ்வு தொடங்கியது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து ஆலய முன்றிலில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவரும் நினைவு கூரப்பட்டனர். அதன் பின்னர், அமிர்தகழி புனித கப்பலேந்திய மாதா தேவாலயத்தில், ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகள் தலைமையில் விசேட வழிபாடு நடைபெற்றது. இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வேண்டுதலும் நடைப்பெற்றது. இந்த நிகழ்வுகளில், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ். வசந்தராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உப குழு உறுப்பினர்கள் மற்றும் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளின் உறுப்பினர்களும் பெருமளவு பொது மக்களும் கலந்துகொண்டனர்.

unnamed unnameds