நிலச்சரிவு, வெள்ளம்: உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் இலங்கை
 
srilanka_flood_afp_இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய அளவில் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வரையில் இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தகவல்கள் வெளியிட்டுள்ளது.

65 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரம் பேர் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறி 600 நலன்புரி மையங்கள் உட்பட தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.srilanka_flood_mishapஇடர் முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, மேல் மாகாணத்திலே கூடுதலான குடும்பங்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது 75 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

57 ஆயிரம் குடும்பங்களை கொண்ட 2 இலட்சத்து 95 ஆயிரம் பேர் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி 326 நலன்புரி மையங்கள் உட்பட பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 42 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 86 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் தகவல் கூறுகிறது.

இறுதியாக வெளியிடப்பட்டுள்ள அதிகார்வபூர்வ தகவல்களின் படி 64 மரணங்கள் பதிவாகியுள்ளது. இதில் 42 மரணங்கள் நிலச்சரிவு காரணமாகவும், ஏனைய மரணங்கள் மழை வெள்ளம் காரணமாகவும் ஏற்பட்டுள்ளன.
நிலச்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்ட பிரதேசங்களில் ஆகக் குறைந்தது 131 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை இவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில் இவர்கள் நிலச்சரிவுகளில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என உறவினர்களினால் அஞ்சப்படுகின்றது.

பெருந் தோட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக நிலச்சரிவு அபாயம் தொடர்ந்தும் காணப்படுகின்றன. சில இடங்களில் குடியிருப்பாளர்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி பள்ளிக் கூடங்களில் தஞ்சம் பெற்றுள்ளனளர்.

இதே வேளை இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் பல்வேறு நாடுகள் உதவ முன் வந்துள்ளன.

முதலாவது உதவியாக இரு கப்பல்களிலும் விமானமொன்றின் மூலமும் இன்று மாலை இந்திய அரசின் நிவாரணப் பொருட்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிவாரண உதவிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் கேகாலை மாவட்டம் புளத்கோபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்த நிலச்சரிவில், 16 பேர் புதையுண்டு காணாமல் போயிருந்தனர். அதில், 14 பேரின் சடலங்களை இராணுவ மீட்புக் குழு மீட்டுள்ளது. ஏனைய இருவர் காணமல் போயுள்ளனர்.

பாரிய நிலச்சரிவுக்குள்ளான அரநாயக்கா பிரதேசத்தில் இன்று 4வது நாளாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
 
இச்சூழலில், புளத்கோபிட்டிய பிரதேசத்திற்கு மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், தேசிய கலந்துரையாடல் மற்றும் சக வாழ்வு அமைச்சருமான மனோ கணேசன் ஆகியோர் நேரடியாக சென்று அழிவுகளையும், சேதங்களையும் பார்வையிட்டனர்.

தமது இருப்பிடங்களை விட்டு நலன்புரி மையங்களில் தங்கியுள்ள அந்த பிரதேச பெருந் தோட்ட குடியிருப்பாளர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தேவைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.

தமது பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என பெருந் தோட்ட குடியிருப்பாளர்களினால் அமைச்சர்களிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனி திகாம்பரம் தனது அமைச்சு ஊடாக 100 வீடுகள் அமைத்து தரப்படும் எதிர்வரும் 5ம் தேதி வீடமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், அமைச்சர்  உறுதியளித்துள்ளார்.