விவசாயக் கடன் தள்ளுபடி, 500 மதுபானக் கடைகள் மூடல்: ஜெயலலிதா உத்தரவுகள்
இன்று தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விவசாயக் கடன் தள்ளுபடி, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, பதவியேற்பு விழா முடிந்த பிறகு தலைமைச் செயலகத்திற்குச் சென்று ஐந்து முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.முதலாவதாக, கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதிவரை சிறு, குறு விவசாயிகளால் கூட்டுறுவு வங்கிகளிலிருந்து பெறப்பட்ட பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இதன் காரணமாக அரசுக்கு 5,780 கோடி ரூபாய் செலவு ஏற்படுமென அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதற்கான உத்தரவில் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் ஏற்படும் இழப்பை சமாளிக்க ஆண்டுக்கு 1,607 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு வழங்கப்படும். இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், ஏழைப் பெண்களுக்கென செய்யப்படும் அனைத்து திருமணத் திட்டங்களிலும் தற்போது 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படுகிறது. அது இனிமேல் 8 கிராமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரம் இனி 750 யூனிட்டுகளாக வழங்கப்படுவதற்கான உத்தரவும், 500 அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடும் உத்தரவிலும் ஜெயலலிதா கையெழுத்திட்டிருக்கிறார்.
தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து கட்சிகளுமே மதுவிலக்கை முக்கிய வாக்குறுதியாக அளித்த நிலையில், ஜெயலலிதா மட்டும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி, 500 மதுபானக் கடைகள் மூடப்படுவது தவிர, தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணி என்பதற்குப் பதிலாக 12 மணியாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை நேரத்தில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.