காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவ முடிவு-

missingகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, உள்விவகார அமைச்சு கூறுகின்றது. கடந்த காலங்களில் காணாமல் போனதாக கூறப்படும் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் என கருதப்படும் நபர்கள் பற்றிய தகவல்களை அவர்களது உறவினர்கள் பெற்றுக்கொள்வதே, இதன் நோக்கம் என, குறித்த அமைச்சு கூறியுள்ளது. இலங்கையில் 20,000க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது என, இது தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலகம் கூறியுள்ளது. இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நிறுவுமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக தேசிய அடையாள அட்டை-

ew3rereநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டைகள் தொலைந்து அல்லது சேதமடைந்திருப்பின் இலவசமாக அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவற்றுக்காக செலவாகும் முழுத் தொகையையும் அமைச்சு பொறுப்பேற்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வஜிர அபேவர்த்தன இக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், சுமார் 3000 பேரை அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

ஹொரோவப்பத்தானை பொறுப்பதிகாரியின் மகள் கொலை-

murderஹொரோவப்பத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கலேன்பிதுனுவௌ – அக்கரவிஸ்ஸ பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்றுஅதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி காயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இவரைக் கைதுசெய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதுபற்றிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமை பொறுப்பேற்பு-

wயாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்ஞ தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்றுகாலை 10.00 மணியளவில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதன்பின்னர், பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டினை தொடர்ந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாத்தளை பொலிஸ் பிரிவில் சிரேஸட் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் யாழிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார். தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், சட்டம் மற்றும் நீதிக்கு அமைவாக யாழில் நடைபெறும், குற்றச்செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நீதியின் வழியில் மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

ஜப்பானில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு-

thumb_large_01-Welcome-by-two-Children_sஜீ7 நாடுகளின் மாநாட்டுக்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. நகோயா சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பான் வெளிவகார அமைச்சர் மற்றும் மாவட்ட ஆளுனர் ஆகியோரடங்கிய குழுவினரால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் வியட்நாம் ஜனாதிபதி உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் பங்கேற்பதில்லை-

aqகிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை என்று முப்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படையினரின் எந்தவொரு முகாமிற்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் கடுந்தொனியில் பேசியிருந்தார். இந்நிலையிலேயே படையினரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்ததாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி நேற்று கூறினார். அத்துடன் கடற்படையினால் வழங்கப்பட்ட எழுத்து மூலமான முறைப்பாட்டையும் ஜனாதிபதியிடம் கையளித்ததாக அவர் கூறினார். எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தில் ஆளுநர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் போன்றவர்களும் அங்கு இருந்ததால் உச்சபட்ச தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக இவ்வாறான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

500க்கும் மேற்பட்ட அகதிகளுடன் படகு கவிழ்ந்து விபத்து-

qwewஇத்தாலி நோக்கி வந்த படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை இத்தாலி கடற்படையினர் மீட்டனர். இதில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் உள்ள சிசிலி வளைகுடா பகுதியில் 550க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய படகில் இத்தாலி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த படகு திடீரென ஒரு பக்கமாக சாய்து மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உயிர் பிழைப்பதற்காக பலர் படகில் இருந்து குதித்தனர். அப்போது அந்த வழியாக வந்த இத்தாலி கடற்படை கப்பல் அதை பார்த்து விட்டது. உடனே கப்பலில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு மிதவைகளை பயணிகளை நோக்கி வீசினார்கள். அதை பிடித்துக்கொண்டு பலர் மிதந்தனர். கப்பலில் இருந்த மீட்பு படகுகளையும் உடனடியாக கீழே இறக்கி அங்கு சென்றனர். அதன்மூலம் அவர்களை ஒவ்வொருவராக மீட்டு கப்பலில் ஏற்றினார்கள். 562 பேர் மீட்கப்பட்டனர். 7 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். பலரை காணவில்லை. மிகச் சிறிய படகில் 500க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததால் அதை தாங்க முடியாமல் படகு கவிழ்ந்தது தெரியவந்தது. படகில் வந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.