நோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலர் விஜயம்-
நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தனது இலங்கைக்கான விஜயத்தின் போது, வட மாகாணத்துக்கும் செல்வார் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ம் திகதி அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதோடு, அங்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
டொரே ஹேடர்ம் எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் ஜூன் 2ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார். அவர் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலரை சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் காணி தொடர்பில் பரிசீலிக்க தயார்-நீதி அமைச்சர்-
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 6 உப குழுக்களும் ஒரு நிறைவேற்றுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் அரசியல் தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களும் உள்வாங்கப்படும். தேவை ஏற்படின் கூட்டமைப்புடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் உள்ளடக்கப்படும் அரசியல்தீர்வு திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மண்சரிவு 200 பேர் இடம்பெயர்வு-
மஸ்கெலியா – காட்மோர் கல்கந்த தோட்டப்பகுதியில் நேற்று பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 47 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தோட்டத்தில் உள்ள வெளிகல உத்தியோகத்தரின் விடுதியிலும் ஆலயங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் பாரிய மண்மேடு ஒன்று அப் பகுதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. குறித்த தோட்டத்திற்கு இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு காட்மோர் கல்கந்த தோட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த மக்கள் காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 03 மாதங்கள் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் தமது இடங்களுக்கு திரும்பிய அவர்கள், தற்போது இவ்வாறானதொரு இன்னலுக்கு முகம்கொடுத்துள்ளனர். எனவே, இம்முறையாவது எங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குறித்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அம்பகமுவ பிரதேச செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது.