புதிய அரசியலமைப்பு தொடர்பான மக்களின் யோசனைகள் பிரதமரிடம் கையளிப்பு-

ranilபுதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது தொடர்பில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் அடங்கிய அறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், நாளை செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளதாக, அவ்வறிக்கையைத் தயாரித்த குழு அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்களின் யோசனைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் சேகரித்து வந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையையே, நாளைய தினத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் சந்திப்பு-

ranil moonபிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூனை தென்கொரியாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 107 ஆவது ரொடரி சர்வதேச கழக பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனை சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன் தென்கொரிய பிரதமரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதேவேளை ரொடரி சர்வதேச கழக பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேருரை நிகழ்த்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு-

lasanthaஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு, இராணுவ புலனாய்வு முகாம்களிலுள்ள அனைத்து தகவல்களையும், ஆவணங்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இராணுவ தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இதற்கு முன்னரும் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய மலகலகே ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் போராட்டம்-

2131தமக்கான நியமனத்தினை வழங்க வேண்டும், அடிப்படை உரிமைகள் பெற்றுத்தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் இன்று கவனீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மாகாண சுகாதார அமைச்சின் முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் சுமார் 125 பேர் கலந்துகொண்டிருந்தனர். பின்னர் அவ்விடத்துக்கு வந்த வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனால் இரண்டு கிழமைக்குள் இதற்கு பதில் தரப்படும் எனவும், இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.