ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை மீளமைப்பது குறித்து கலந்துரையாடல்-

europeanஇலங்கையின் அபிவிருத்தி தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை மீளமைப்பது குறித்து, அரசாங்கத்துடன் நெருக்கமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் செயற்குழு கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்திக்கு உதவுவதற்கு அப்பால், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நடைமுறைப்படுத்தல், நீதியையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்தல் என்ற அம்சங்களில் புதிய மீளமைப்பு திட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு உதவி செய்யவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வலயப் பிரதானியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண சபையின் அனைவருக்கும் அழைப்பாணை-

courtsவட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை, அந்த மாகாணத்தின் ஆளுனர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி ஆதித்ய காந்த மத்துமபடபெதிகேவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் கேள்விப் பத்திர நடைமுறையை மீறி, அரச நிர்மாண ஒப்பந்தங்களை, அரசியல் நண்பர்களுக்கு பெற்றுக்கொடுத்ததன் மூலம், முதலமைச்சரும் அவர் சார்ந்தவர்களும், அரச நிதியினை மோசடி செய்துள்ளனர் எனக் கூறி, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதிகளின் மோசடி நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய அரசாங்கத்தால் சுற்றறிக்கைகள் சில வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தை கவனத்தில் கொள்ளாது அவர்கள் செயற்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கனரக வாகன விபத்தில் ஒருவர் பலி-

accidentகிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியில் இன்றுகாலை ஏற்பட்ட வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதநகர் பகுதியை சேர்ந்த, 2 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம், கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள விகாரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டபோது, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள், கனரக வாகனத்தின் பின்பக்கமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், அலைபேசியில் உரையாடியவாறு பயணித்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தில் மோதியதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கே.பிக்கு எதிரான மனு ஜுலை 25 இல் விசாரணைக்கு வருகின்றது-

KPகே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி, ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவை ஜுலை 25 இல் விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று அறிவித்துள்ளது.

இந்த மனு, நீதியரசர்களான கே. மலல்கொட மற்றும் பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடர வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா எனத் தீர்மானிக்குமாறு, மனுதாரருக்கு நீதிமன்றம் பணித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாயகம் திரும்பினார்-

ranilதென்கொரியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜியத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பிரதிநிதிகளும் நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர். ஹொங்கொங் இலிருந்து புறப்பட்ட பசுபிக் விமானச்சேவைக்கு சொந்தமான 611 என்னும் விமானத்தினூடாகவே இவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். தென் கொரியாவில் நடைபெறவிருந்த 107 வது ரொட்டரி சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காகவே பிரதமர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரான பான்கி மூன் ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் தென் கொரிய பிரதமரான ஹவாங் கியோ ஹ வையும் சந்தித்துள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம்-

sedfaநோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம், 4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் இன்று காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.