விஜித்த ஹேரத் கைதாகி பிணையில் விடுவிப்பு-

vijitha herathமக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், வாகனம் மோதியதால் தொலைபேசிக் கம்பத்துக்கு ஏற்பட்ட சேதத்தை தானே சரிசெய்வதாக விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புகையிரதக்கடவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு-

railwayபாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையிலிருந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் நாடுமுழுவதிலும் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரியும் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை கடக்கும்போது வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் கடக்குமாறு எச்சரிக்கை விடுத்தே குறித்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடிமருந்துடன் பெண் உட்படநால்வர் கைது-

arrest (9)தடை செய்யப்பட்ட ரி.என்.ரி ரக வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வரை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று நபர்கள், கல் உடைப்பதற்காக 2 கிலோகிராம் எடையுடைய ரிஎன்ரி ரக வெடிமருந்தைக் கொண்டு சென்றபோது, அவர்களை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்போது, அவர்களுக்கு வெடிமருந்தை விற்பனை செய்த பெண் தொடர்பில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து, 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 13 கிலோகிராம் ரிஎன்ரி ரக வெடிமருந்து மீட்கப்பட்டது. கல் உடைப்பதற்காக இந்த வெடிமருந்தை விற்பனை செய்துவந்ததாக கைதுசெய்யப்பட்ட பெண் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸ் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்க விஷேட சபை-

policeபொலிஸ் திணைக்களத்தின் அனைத்து செய்திகளும் இனி ஊடகப்பணிப்பாளர் சபையின் மூலமே ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன மற்றும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் புதிய ஊடகப்பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் செய்திகள் மிகச் சரியாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதற்காக குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சபை உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரிகளிடம் செய்திகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா நிதியுதவி-

canadaஇலங்கையின் இயற்கை அனர்த்த நிவாரணங்களுக்காக கனேடிய அரசாங்கம் 35 மில்லியன் இலங்கை ஷரூபாய்களை வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிதியானது, கனேடிய மனிதாபிமான உதவு நிதியமான சீ.எச்.ஏ.எஃப், அவசர அனர்த்த உதவிநிதியம் மற்றும் குளோபல் எப்ஃபெயர்ஸ் கனடா ஆகிய நிறுவனங்களின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 62 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தின கண்டனப் பேரணி-

arpattamசர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுர சந்தியில் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு பிரதேச செயலாளர் தவராஜவுக்கு புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடியினை வழங்கி ஆரம்பித்த பேரணி காந்தி பூங்கா வரைக்கும் சென்றது. இந்த பேரணியில் புகைத்தல் மற்றும் மது போன்ற வற்றால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு கண்டன பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுக்கு முகாமைத்துவ உதவியாளர் கிரிதரன் நிர்மலா, மகா சங்க முகாமையாளர் வாமதேவன் கலைச் செல்வி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் தவராஜா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகள் தொடர்பில் கணக்கெடுப்பு-

dsssdவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பிலான கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய வீடு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் செயலாளர் லக்விஜய சாகர பலான்சூரிய தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து ஒன்றிணைந்த வீடுகள் அபிவிருத்தி தொடர்பிலான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.