யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட 35ம் ஆண்டு நினைவுதினம்-
இன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 35ம் ஆண்டு நினைவு தினமாகும். 1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார். தென்னாசியாவிலேயே மிகவும் பெரியதும் 98,000ற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்து பிரதிகளை உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்நிகழ்வு ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகவும் இது கருதப்படுகிறது. 1996ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். நூல்நிலையத்தை மறுநிர்மாணம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புளொட், அமைப்பினரும், சில தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இப்பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். யாழ். பொது நூலகத்தை மறுநிர்மாணம் செய்வதற்கு பாடுபட்டவர்கள் அனைவரும் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்களே. இதேவேளை யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் யாழ். நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பன்னிரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த வழக்குத் தவணையின்போது மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்பிக்க ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாழ் உத்தரவிட்டிருந்தார். அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் இன்றையதினம் பதில் நீதிவானிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பன்னிரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
இராணுவ அதிகாரிகளின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி-
பிரகீத் எக்னலிகொட காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, கூறி இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பிரதிவாதிகளாக குறித்த மனுவில் பெயரிடப்பட்டுள்ளனர். எந்தவொரு நியாயமும் இன்றி தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தம்மை விளக்கமறியலில் வைக்கும்படி, ஹோமாகம நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டமை மூலம் தமது சுதந்திரம் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விடயங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 29ம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நோர்வே இராஜாங்க செயலாளர் வடக்கு முதல்வர் மற்றும் ஆளுநருடன் சந்திப்பு-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அவர் இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம் செய்ததுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வட மாகாணத்தில் நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், நோர்வே அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் உட்கட்டுமான பணிகள், சமூக நலன் மேம்பாட்டுத் திட்டங்கள், பொருளாதார ரீதியாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் வாழ்வாதார கட்டமைப்புக்களை உருவாக்கல் போன்ற விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன. மேலும் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்க பல்வேறு வகையிலான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக டொரே ஹேடர்ம் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறினார். இதனை தொடர்ந்து அவர் வடமாகாண முதலமைச்சரை கைத்தடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது, வடமாகாண சபையின் தற்போதைய நிலைமைகள், அதனுடாக மக்களுக்கு முன்னெடுக்கும் பணிகள் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
உலக வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள்-
தேர்தல் திணைக்களம், யாழ் மாவட்ட செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உலக வாக்காளர்கள் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்களின் வாக்கு உரிமைகளைப் பற்றி அறிவுருத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இவ் ஊர்வலம் இன்று யாழ் மத்திய பேஷரூந்துநிலையத்தில் ஆரம்பமாகி யாழ் ஆஸ்பத்திரி வீதியூடாக மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் வாக்காளர்களின் வாக்கு உரிமைகள் பற்றி விழிப்புணர்வு நாடகம் மற்றும் உலக வாக்காளர்கள் தினத்தின் முக்கியத்துவம், வாக்காளர்களின் வாக்கு உரிமைகள், இதனுடாக மக்களுக்கான முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பற்றி விழிப்புணர்வு சிறப்புரைகளும் இடம்பெற்றன. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், தேர்தல் ஆணைக்குழு தலைவர் போராசிரியர் எஸ்.ரட்ணஜீவன் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிரான மனு பரிசீலணை-
இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஜூலை மாதம் 7ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. களனி பகுதியைச் சேர்ந்த மூவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சுதந்திர தின நிகழ்வின்போது தமிழில் தேசிய கீதம் பாட அமைச்சரவை எடுத்த முடிவு, அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடு எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அமைச்சரவை அரசியலமைப்பை மீறியுள்ளதாக, தீர்ப்பளிக்குமாறும் உயர்நீதிமன்றத்திடம் மனுதாரரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிககள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறும் ஊடக அடக்குமுறையை நிறுத்துமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. பத்திரிகையாளராக மத்திரமன்றி சிறந்த எழுத்தாளராகவும் பல நூல்களை எழுதியுள்ள ஐயாத்துரை நடேசன் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிரந்தர நியமனம் கோரி கைக்குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டம்-
நிரந்தர நியமனம் கோரி, தமது கைக்குழந்தைகளை கையில் ஏந்தியவாறு சுகாதார ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வடமாகாண ஆளுநரை சந்தித்து நிரந்தர நியமனம் குறித்து கலந்துரையாடினர். யாழ். மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களின் கீழ் சுமார் 320க்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றினர். 15 வருடங்கள் மற்றும் அதற்கு குறைவான காலப்பகுதிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடமையாற்றிய குறித்த சுகாதார ஊழியர்கள் கடமையிலிருந்து யாழ். மாவட்ட சுகாதார பணிமனையினால் நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்டதன் பின்னரும் பல பொதுசுகாதார பரிசோதகர்கள் அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றனர். இவ்வாறு கடமையாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த பல மாதங்களாக வடமாகாண சபை முன்பாகவும் வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தின் முன்பாகவும் போராட்டங்களை குறித்த ஊழியர்கள் முன்னெடுத்து வந்தனர். இவ்வாறான நிலையில், இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக குழந்தைகளை ஏந்தியவாறு வெயிலில் நின்று நிரந்தர நியமனம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வடமாகாண ஆளுநரையும் சந்தித்தனர். இவ்விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரை ஆளுநர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பிரச்சினை குறித்து கலந்துரையாட முற்பட்டபோது, வடமாகாண சுகாதார அமைச்சர் கூட்டமொன்றில் இருப்பதனால் கதைக்க முடியாது என கூறியதாகவும், வெள்ளிக்கிழமை (03) அலுவலகத்துக்கு வருமாறும் நிரந்தர நியமனம் குறித்து உறுதியான பதிலளிப்பதாகவும் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவித்தார். குடும்ப வறுமை, தொழில் இல்லாத பிரச்சினை, குடும்பங்களையும் கைக்குழந்தைகளையும் பராமரிப்பதற்கு முடியாத நிலையில் இருக்கும் தமக்கு வேலை வாய்ப்பினை தருமாறு பல கோரிக்கைகளை முன்வைத்த போதும், வடமாகாண அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கைக்குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாய்மார் தெரிவித்ததுடன், வெள்ளிக்கிழமை உரிய பதில் வழங்கப்படாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.