புலிகள் மீதான அமெரிக்கத் தடை நீடிப்பு-

americaதமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை. எனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் உள்ளிட்ட 13 புலி ஆதரவாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் கைதுசெய்யப்பட்டனர். மேலும், 2015ம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேசியாவில் ஏனைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, புலிகள் மீதான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்களுக்கு விளக்கமறியல்-

vithya murderபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தபோது நீதிபதி மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், வித்தியாவின் தாயாரை சந்தேகநபர்களின் உறவினர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில வழக்கு தவனைகளின் போது வித்தியாவின் தாயார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் இது தொடர்பாக தெரிவித்திருந்தார். அதன்படி இது தொடர்பாக விசாரனை செய்யுமாறு ஊர்காவல்துறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் ஊடகப்பேச்சாளர் நாடு கடத்தல்-

dsfssdsசிஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளருமான ரொகான் வெலிவிட்டவை, சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. ஆசிய ஒலிபரப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக, கடந்த திங்கட்கிழமை ரொகான் வெலிவிட்ட சிங்கப்பூர் பயணம் செய்திருந்தார்.

சிங்கப்பூர் விமானநிலையத்தில் வைத்து அவரை மூன்று மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்த அந்நாட்டின் குடிவரவு -குடியகல்வுத்துறை அதிகாரிகள் சிங்கப்பூருக்குள் அவர் நுழைவதற்கான அனுமதியினை வழங்க முடியாது என்று கூறி கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் கரு ஜயசூரிய பங்களாதேஷிற்கு விஜயம்-

karuஇலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய பங்களாதேஷிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். டாக்காவில் இடம்பெற உள்ள மத நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்வதாக அவரின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சபாநாயகரின் இந்த விஜயத்தின் போது, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீத், பங்களாதேஷ் எதிர்கட்சி தலைவி பேகம் இர்ஷாட், அந்நாட்டின் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளார்.

மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்-

mahinda (4)முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் 50பேரையும், இரண்டு கட்டங்களாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இன்று 25பேரும் நாளை 25 பேருமாக, அனைத்து இராணுவத்தினரும் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் 100பேரில் 50 பேர், ஒரு மாதத்துக்கு முன்னர், நீக்கப்பட்டிருந்தனர். ஏனைய 50 பேரையும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தத் தீர்மானம் ஒற்றிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இன்றும் நாளையும், அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தவர்களில், இரர்ணுவத்தின் பிரிகேடியர் ஒருவரும், லெப்டிணன் கேணல் ஒருவருமாக, உயரதிகாரிகள் பலர் இருந்தனர். மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நீக்கப்படுவதை அடுத்து, பிரமுகர் பாதுகாப்புக்காக விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய 50பேரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.