பல அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-

sri lanka300ற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணைக்குழு செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். அரச நிர்வாக சேவை,கணக்காளர்கள்,கல்வி நிர்வாக சேவை, வைத்தியர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக சில அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஒழுக்காற்று விசாரணைகளை தாமதப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தக் குற்றங்கள் குறித்து அமர்வில் முறையிட முடிவு-

sivajiயுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் ஜூலை மாதம் 13ம் திகதி அளவில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். இவருடன் வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சகிகரனும் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.

யாழில் மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது-

arrest (2)யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை நேற்றுமாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரின் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளது. இவர்களை துரத்தி பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பொதுவிடத்தில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்கவின் 2ஆயிரத்து 260பேர் முகாம்களில் தங்கவைப்பு-

aranaikeஅரநாயக்க சாமசர மலை மற்றும் அம்பலகந்த ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளினால் இடம்பெயர்ந்த 2 ஆயிரத்து 260 பேர் இன்னும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

794 குடும்பங்களை சேர்ந்த இவர்கள், அரநாயக்க பிரதேச செயலாளர் காரியாலம் வசம் உள்ள பாடசாலைகள் மற்றும் விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

பாரியளவு சுண்ணாம்பு கல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைது-

sunnampuயாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்பு கல் அகழ்ந்து கொண்டுச்சென்ற சந்தேகத்தில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி வலளாய் பகுதியிலிருந்து பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி திருட்டுத்தனமாக, பாரியளவில் சுண்ணாம்பு கற்களை அகழ்ந்து எடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெக்கோ இயந்திரங்கள் 5 மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் 2 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.