கொஸ்கமுவ தீ விபத்தில் இராணுவவீரர் உயிரிழப்பு-

asdsadsdகொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது தவிர, காயமடைந்த இருவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து குறித்த முகாமை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் கைவிட்டு சென்ற வீடுகளில் உள்ள பொருட்களை பாதுகாக்க இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர கூறியுள்ளார். அத்துடன் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்றவுடனேயே, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சீ.ஐ.டியினருக்கு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். குறித்த இராணுவமுகாமில் ஏற்பட்ட தீயால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு அவசர உதவிகளை செய்துகொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சுகாதார சேவைகள் சேவைகள் பணிப்பாளர் பாலித்தவுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் இரத்தினபுரி, கொழும்பு, கரவானெல்ல, பாதுக்க, கம்பளை, இராகமை உள்ளிட்ட வைத்தியசாலைகளை தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்தவின் அறிவுறுத்தலின் பேரில் சுமார் 20 அம்பியூலன்ஸ் வண்டிகள் அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மூடப்பட்ட அவிசாவளை – இரத்தினபுரி வீதிக்குப் பதிலாக, மாற்று வீதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஹன்வெல்ல, பகோட, கிரிந்திவெல, உரபொல, கொங்கல்தெனிய, ருவன்வெல்ல ஆகிய வீதிகள், மாற்று வீதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த தீ பரவல் காரணமாக சாலவையில் இருந்து அவிசாவளை வரையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.