கொஸ்கம பாதுகாப்பை உறுதிப்படுத்த 96 மணித்தியாலம் தேவை-இராணுவம்-

435454அவிசாவளை – கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 05.30 அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதேவேளை, இந்த சம்பவத்தால் களஞ்சியசாலையில் இருந்த பாரிய குண்டுகள் உட்பட ஆயுதங்கள் சில அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளிலும் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்கிருந்த வீடுகள் சில பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன. வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதோடு, குறித்த இராணுவ முகாமுக்கு ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பாலுள்ள குடியிருப்புக்களில் மாத்திரம் மக்கள் மீண்டும் வரலாம் என, இன்றுகாலை இராணுவம் அறிவித்தது. இந்நிலையில், அப் பகுதியில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பின் அவற்றை தீண்டாது, உடன் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு இராணுவம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் காண்பவர்கள் 011 3 81 86 09 அல்லது 011 2 43 42 51 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவிசாவளை வீதியின் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி அவ் வீதியால் அவிசாவளையில் இருந்து வரும் வாகனங்களை கொஸ்கம வரையிலும் கொழும்பில் இருந்து வரும் வாகனங்கள் ஹங்வெல்ல நகர் வரையிலும் மட்டுப்படுத்த, பாதுகாப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த விபத்தால் ஒரு இராணுவவீரர் உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சிறு உபாதைகளுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 39 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, விபத்து இடம்பெற்ற பகுதியைப் பார்வையிட அமைச்சர் சாகல ரத்நாயக்க சென்றிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் இதன்போது கூறியுள்ளார். மேலும், சலாவ இராணுவ முகாம் பகுதியில் தீப்பரவல் காராணமாக ஏற்பட்ட புகையினை சுவாசிப்பதைத் தவிர்க்குமாறும், அப் பகுதிக்கு செல்பவர்கள் துணியால் முகத்தை மூடிக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அவிசாவளை பகுதியில் ஏழு பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்தையும் நாளை திறக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கொஸ்கம – சலாவ இராணுவ முகாமின் களஞ்சியசாலையில் இடம்பெற்ற திடீர் வெடிப்பு காராணமாக ஏற்பட்ட தீப்பரவலை அடுத்து, இன்று அப்பகுதி பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி தொம்பே, பாதுக்க, சீதாவக ஆகிய கல்வி வலையங்களின் ஏழு பாடசாலைகள் தவிர ஏனையவற்றை நாளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அகரவிட மகா வித்தியாலயம், சலாவ க.வி, களுஅக்கல சித்தார்த்த க.வி, ஷாந்த ஜோன் போஸ்கோ க.வி, கொஸ்கம சுமேத கவி, கதுபோட க.வி, கொஸ்கம மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே நாளை மூடப்படும் என, மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார். இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மத்திய அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாலாவ இராணுவமுகாமில் ஏற்பட்ட தீ காரணமாக பாதிப்புக்குள்ளான வீடுகளை மீள நிர்மாணிக்கவோ அல்லது திருத்தவோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்றுகாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் சிலநாட்களில் புனரமைன்னப்பட வேண்டிய வீடுகள் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகளின்படி, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல். கிரிஷாந்த டீ சில்வா உத்தரவிட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். நேற்று மாலை 5.45 மணியளவில் தீ பரவ ஆரம்பித்த நிலையில் தற்போது முற்றாக அணைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் காலைவரை குறித்த பிரதேசத்தில் வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணமே இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கொழும்பு அவிசாவளை பிரதான வீதி போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்ப 48 மணி நேரமாகுமென மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவிசாவளை கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்தால் முகாமை அண்மித்து காணப்படும் பிரதேசத்தை பாதுகாப்பான பிரதேசம் என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். தீ முழுமையாக அணைக்கப்பட்ட போதும் ஆயுத களஞ்சியத்திலிருந்து தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இராணுவ முகாமை சுற்றி காணப்படும் பிரதேசத்தில் விழுந்து கிடக்கின்ற ஆயுதங்களையும் ஆயுதங்களின் பாகங்களையும் அகற்றி துப்பரவு செய்வதற்கு 96 மணிநேரம் இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளது. அந்தவகையில் 96 மணி நேரத்தின் பின்னரே இராணுவ முகாமை சுற்றியுள்ள பிரதேசங்களை பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்க முடியும். வீடுகளுக்குள்ளும் வெளியிலும் ஆயுத களஞ்சியத்திலிருந்து சிதறிய ஆயுதங்களின் துண்டுகளும் பாகங்களும் வந்து விழுந்துள்ளன. சில ஆயுதங்கள் முழுமையாக விழுந்து காணப்படுகின்றன. எனவே 96 மணித்தியாலத்திற்கு பின்னரே குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்தி கூறமுடியும் என்றார் அவர்.