வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு அதிகம்-எஸ்.வியாழேந்திரன் எம்.பி-

asdsadsadsவடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகங்களின் மட்டும் ஆளுநர்கள் தலையீடுகள் அதிகமாக உள்ளன. இலங்கையிலுள்ள வேறு மாகாணங்களில் இவ்வாறான தலையீடுகள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். அத்துடன் நல்லாட்சியை உருவாக்குவதில் காத்திரமான பங்களிப்பை சிறுபான்மைச் சமூகம் வழங்கியுள்ளது. இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் தாம் முன்னின்று செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பில் சனிக்கிழமை(04) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகின்றோம். பெரும்பான்மையின மக்களுடன் இணைந்துவாழ விரும்புகின்றோம். ஆனால், இந்த நாட்டில் உள்ள பேரினவாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முனைகின்றனர் என்றார். தற்போது வடகிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் மட்டுமே ஆளுநர்களின் தலையீடுகள் அதிகமாகவுள்ளன. இலங்கையில் உள்ள வேறு மாகாணங்களில் இவ்வாறான தலையீடுகள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரியை ஏசினார் என்ற காரணத்திற்காக அதைப் பேரினவாதிகள் பூதாகரமாக்குவது இனவாத செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. இந்த நல்லாட்சியானது நல்லாட்சியாகவே தொடர்ந்து இருக்க வேண்டும். இந்த நாட்டில் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதையே விரும்புகின்றோம் எனவும் தெரிவித்தார். (நன்றி –தமிழ் Mirror )