பிரித்தானிய உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்-

sdfsdsddபிரித்தானியாவின் உயர் அதிகாரிகள் இருவர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் நிரந்தர செயலாளர் சைமன் மெக் டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து நிறுவனத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லொவ்கொக் ஆகியோரே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். மேலும், இவர்களின் இந்த விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

பஷில் பிணையில் விடுதலை, நாமலிடம் விசாரணை-

basilமுன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி விவகாரம் ஒன்று தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ச பூக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றுகாலை ஆஜரானார். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி உட்பட, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சில விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரையொதுங்கியது-

dead.bodyநெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.

மேலும் இது இந்திய அல்லது இலங்கை மீனவராக இருக்க முடிலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதீபதி சடலத்தினை பார்வையிட்ட பின்னர், அதனை, யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெடுந்தீவு பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பில் பாடசாலையைப் பூட்டி ஆர்ப்பாட்டம்-

et565கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலை கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாடத்தில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 1ஏபி தரத்தினைக் கொண்ட இப் பாடசாலையில் சுமார் 2000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனினும், இங்கு 100 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ் வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் காரணமாக தற்போது 62 ஆசிரியர்கள் மாத்திரமே இப் பாடசாலையில் உள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் வலயக் கல்விப் பணிப்பாளரே மாணவர்களின் கல்வியைச் சீரழிக்காதே, பிரதேச அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்ற வேண்டாம், மாகாணக் கல்விப் பணிப்பாளரே இனப் பாகுபாடு எதற்கு?, வலயக் கல்விப் பணிப்பாளரே வலயத்தை சீரழிக்காதே, மாகாணக் கல்விப் பணிப்பாளரே ஆசிரியர் இடமாற்றத்துக்கான பதிலீடு எங்கே? எப்போது?, எதிர்கால அரசியலுக்காக மாணவர்களின் கல்வியை சீரழிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா கூறுகையில், கல்குடா கல்வி வலயத்தில் இந்த பாடசாலை மாத்திரமல்ல செங்கலடி மத்திய கல்லூரி, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம், சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம், கிரான் மகா வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக் கல்லூரி, களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு உடனடியாக ஆசிரியர் ஆளணியை வழங்கக்கூடிய கடமைப்பாடு உள்ளது. இது தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளேன். இன்னும் 15 நாட்களுக்குள் இந்த பாடசாலைக்கு 15 ஆசிரியர்களை வழங்குவதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார். மிக விரைவில் இந்த பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் இந்த வருட இறுதிக்குள் புதிய ஆசிரியர் நியமனத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்போது இந்த பாடசாலைக்கு முழுமையான ஆசிரியர்கள் வழங்கப்படும் என்றார். ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கல்குடா கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளில் கல்வி நிலை பாதிப்படைவதால் மாணவர்கள் முதல் பெற்றோர்கள் வரை வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலை இன்னும் இடம்பெறாமல் இருக்க கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.