பிரித்தானிய பிரதிநிதிகள் இரா.சம்பந்தன் சந்திப்பு-
sampanthan (12)இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கான வதிவிட செயலாளர் சைமன் மெக்டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து திணைக்களத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லோவ்கோக் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்படி இருவரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றம் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே அவர்கள் இருவரும் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்க வலியுறுத்தி கையெழுத்து வேட்டை-

76766குமார் குணரத்னத்தின் குடியுரிமையினை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி யாழில் கையெழுத்து பெரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய், அடக்குமுறை சட்டங்களை சுருக்கிக் கொள், சகல அரசியல் பழிவாங்கல்களையும் நிறுத்து போன்ற வாகசங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை தொங்கவிட்டு, தமது எதிர்ப்பினை அவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், இது தானா ஜனநாயகம் எனும் தொனிப்பொருளில், துண்டுப் பிரசுரத்தினையும் மக்கள் மத்தியில் அவர்கள் கையளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவியைக் காணவில்லை-

missingயாழில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் காணவில்லை என, பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே காணாமல் போயுள்ளவராவார். நேற்று மாலையில் மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த இவர், இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், நேற்று இரவு 11.00 மணியளவில் பெற்றோர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். இதன்படி சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஹிந்தவின் உயர் பாதுகாப்பு அதிகாரி சி.ஐ.டியில் ஆஜர்-

sadassasasமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயர் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் வன்னியாராச்சி, ஆவணங்கள் சிலவற்றுடன் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். இதேவேளை அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே, நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று ஆஜராகியிருந்தார். 

வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்-

blood testஇலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல், சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

25 இலட்சம் ரூபாய் செலவில் களுத்துறை, கட்டுகஹேன பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சுவதிவி’ மருத்துவ மையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றதா என அறிந்துகொள்ளுவதற்கு இரத்தப் பரிசோதனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

கிழக்கு முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு-

east chiefகிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி பி.லியன ஆராய்ச்சியினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரை கடும் சொற்களால் திட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் யானைகள் அட்டகாசம்-

edwrewrewவவுனியா வடக்கு, புளியங்குளம் இராமனூர் பகுதியில் அமைந்துள்ள, தனிநாயகம் அடிகளார் வித்தியாலய பகுதிக்குள் நுழைந்த யானைகள், அங்குள்ள பயன்தரு மரங்களை அழித்துள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில் உள்ள இப் பாடசாலை வளாகத்திற்குள், நேற்று இரவு நுழைந்த யானைகள், இவ்வாறு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். இதற்கு முன்னரும் இவ்வாறு பாடசாலை வளாகத்திற்குள்ளும் இக் கிராமத்திற்குள்ளும் யானைகளின் அட்டகாசம் பெருகி காணப்பட்டுள்ளது. யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக, அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லையென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், யானைகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.