பிரசன்ன மற்றும் அவரது மனைவி ஆகியோர்க்கு பிணை-
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. காணி விவகாரம் ஒன்றில் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சதுப்புநிலத்தை நிரப்புவதற்காக அந்நிலத்தை சூழ குடியிருந்தவர்களை அப்புறப்படுத்துவதாக உறுதி மொழி வழங்கி, 64 மில்லியன் ரூபா பணத்தை கோரியதோடு, அத்தொகையிலிருந்து 15 மில்லியனை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, பிரசன்ன ரணதுங்கவுக்கும் அவரது மனைவிக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக எல்லைக்குள் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டியணிந்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூலாக்காடு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் மிருக வேட்டை இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கு சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது மரக்குற்றிகளை ஏற்றிய வண்டியில் பயணித்த இராணுவத்தினரால் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மூவர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெற கூடாதெனவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி இன்றையதினம் காலை 8மணிமுதல் நண்பகல் 12மணிவரை பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலர் கே.தனபாலரெத்தினத்திடம் கிராமசேவை அதிகாரிகளினால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.