“காணவில்லை” எனும் சிறப்புச் சான்றிதழை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்-

missingயுத்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மோதல்களின்போது காணாமல் போனவர்களுக்கு, ‘காணவில்லை’ எனும் பெயரில் சிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களினால் அல்லது அம்மோதலின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புக்கள் காரணமாகவும், அரசியல் அமைதியின்மை காரணமாகவும் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் போயுள்ள நபர்களை பதிவு செய்வதற்கான தேவை எழுந்துள்ளது. அவ்வாறான நபர்களை பதிவு செய்வதன் மூலம் அல்லது காணாமற் போன நபர்களது உறவினர்களுக்கு ‘காணவில்லை’ எனும் சான்றிதழை வழங்குவதன் மூலம், காணாமற்போன நபர்களது சொத்துக்களையும் உடைமைகளையும் தற்காலிகமாக முகாமைத்துவம் செய்வதற்கு வழிவகுக்கும். அத்தோடு, காணாமற்போன நபர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கும், காணாமற்போன நபர்கள் தொடர்பாக, உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஏதுவாக அமையும். அதனடிப்படையில் காணாமற்போன நபர்களுக்காக, குறித்த நபர் உயிருடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஒன்றினை வழங்குவதற்கும், காணாமற் போனவர்கள் உயிருடன் இருக்கிறார் அல்லது உயிரிழந்து விட்டார் என உறுதியாக தெரியவரும் பட்சத்தில், அதற்குறிய சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.