சலாவ மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம், வீடுகளில் கொள்ளை-

aarpattamகொழும்பு – அவிசாவளை வீதியின் சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியை மறித்து அப்பிரதேச மக்கள் இன்றுமுற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வீதியை மீளத் திறப்பதாக நேற்று இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். வீதியை திறக்கு முன்னர், தமது வீடுகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சுத்தப்படுத்துமாறு கோரியே அப்பகுதி மக்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் களஞ்சியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45க்கு ஏற்பட்ட தீ விபத்தினால் கிளம்பிய துகள்கள், ரவைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவி வீடுகளில் சிதறிக்கிடக்கின்றன. இதேவேளை கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் தீ பரவியமையால் அந்த பகுதியிலிருந்து வெளியேறியவர்களின் வீடுகளில் கொள்ளைச்சம்பங்கள் இடம்பெற்றமை தொடர்பில் 28 முறைபாடுகள் பதிவாகியுள்ளன. கொள்ளைச் சம்பங்களுடன் தொடர்புடைய சந்தேநபர்களை கைதுசெய்வதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சீதாவக்கை பிரிவிற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மின் உபகரணங்கள், தங்க நகைகள், மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை 720 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கொஸ்கம சாலாவ இராணுவ முகாமிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ள மக்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்வதற்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கபட்டுள்ளது. குறித்த பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மக்களை இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதி வழங்குவதில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இதேவேளை சாலாவ இராணிவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து சிதரிய மற்றும் வெடிக்காத தோட்டக்களின் பாகங்களை மக்கள் சேகரிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. இவ்வாறான பாகங்களை தொடுவதிலிருந்து விலகியிருக்குமாறு மக்களிடம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வெடிப்பொருட்களின் பாகங்கள் காணப்படுமாயின் அதனை செயலிழக்கச்செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அறிவிக்குமாறும் பொலிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அறிவுறுத்தலை மீறி வெடிப்பொருட்களின் பாகங்களை சேகரிக்கும் நபர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளது.