பாராளுமன்ற உறுப்பினர்கள் 13பேர் சீனாவுக்கு விஜயம்-
பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளனர். சீன – இலங்கை நட்புறவு சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் அங்கு செல்லவுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த விஜயத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர் நாளை சீனாவுக்கு செல்லவுள்ளார். மேலும், பிரதி அமைச்சர்களான அஷோக் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, வாசுதேவ நாணயக்கார, ஜே.சி. அலவதுவல, வடிவேலு சுரேஷ், ஜயந்த சமரவீர, கே.கே.பியதாஸ, சந்தித் சமரசிங்க, நிஹால் கலப்பத்தி, அரவிந்த் குமார், விஜித பேருகொட மற்றும் கென்டர் அப்புகாமி ஆகியோரும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கம வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள்-
கொஸ்கம – சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக முழுமையாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் நிர்மாணித்து கொடுக்கவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதன் ஆரம்பகட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வரை, தற்காலிக குடியிருப்புக்களையும் நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது காணிகளுக்குள் குறித்த தற்காலிக இருப்பிடங்களை நிர்மாணிக்கவுள்ளாம். இதன்படி இந்த நடவடிக்கைகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
கொஸ்வத்தை கைக்குண்டு வீச்சில் மூவர் பலி-
கொஸ்வத்தை – தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் பலியான ஆண் புனிதத் தளம் ஒன்றில் பணிபுரிபவராகும். அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்றவேளை, முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு வந்த அந்த ஆண் நபர் கைக்குண்டை வெடிக்க வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இதில், சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, பெண்ணின் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் படுகாயமடைந்த தாய் உயிரிழந்த நிலையில், சிறுமி வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை பெண் ஒருவர் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி நடப்பதாக கிடைத்த தவலையடுத்து, குறித்த இடத்துக்கு பொலிஸார் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை திறந்து வைக்கவுள்ள மோடி-
மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ வசதியுடனேயே இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலிருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலிருந்து உரையாற்றுவரென தெரிவிக்கப்படுகின்றது.
குமார் குணரட்னத்தை விடுவிக்கக்கோரி கையெழுத்து வேட்டை-
முன்னிலை சோசலிஷக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஆரயம்பதி சந்தைக்கு அருகாமையில் முன்னிலை சோசலிஷக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று பொதுமக்களினடம் இந்த கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும், அவருக்கு குடியுரிமையை வழங்குமாறும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குமார் குணரட்னத்திற்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி ஒரு வருட சிறைத் தண்டனையும் 50,000 ஷரூபா அபராதமும் விதித்து கேகாலை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.