உரும்பிராயில் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
தியாகி பொன். சிவகுமாரனின் 42ஆவது நினைவு நிகழ்வுகள் 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. திரு. நித்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு சிவகுமாரனின் சகோதரி மற்றும் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தி.சிறீதரன் (சுகு), வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆகியோரும், பொதுமக்களும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின் முதல் போராளி சிவகுமாரன் அப்போது இப்போராட்டங்களை ஆரம்பித்தவேளையில் எல்லோரும் திரளாகப் பார்த்தனர். ஆனால் போதிய அளவில் உதவ முன்வரவில்லை. நான் பார்த்த போராளிகளில் மிகவும் தூய்மையான போராளிகளில் சிவகுமாரனும் ஒருவர். அந்தக் காலங்களில் சிவகுமாரன் செயல்படுத்த நினைத்தவற்றை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருந்தாலும் இந்த முதல் வீரனின் நினைவு அனைவரின் மனதிலும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.