சட்ட விரோத சிறுநீரக வணிகம் ராஜ்குமார் ராவ் குறித்து இலங்கை போலீசார் விசாரணை

kidneyசட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் ராவ் எனும் பிரதான சந்தேக நபர் இலங்கையில் நடைபெற்ற சட்ட விரோத சிறுநீரக வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இதனை ஆராய்வதற்கு சிறப்பு போலீஸ் குழுவொன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.
சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கொழும்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு இந்திய பிரஜைகள், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது போலீசார் இதனை அறிவித்தனர்.மேலும் கருத்துக்களை தெரிவித்த போலீசார், கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.
கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்த போலீசார், இந்த அறுவை சிகிச்சைகளுடன் தொடர்ப்புடைய ஆவணங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்தனர்.
இதன்படி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஏழு இந்திய பிரஜைகளை, வரும் 22-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அன்றைய தினமே அவர்களின் பிணை மனுக்கள் ஆராயப்படுமென்றும் நீதிபதி அறிவித்தார்.