ஜனநாயக நாடாக கருதுமுன் சீர்திருத்தங்கள் அவசியம்-ஐ.நா அறிக்கையாளர்-

monica pindoசட்டத்தின் ஆட்சியுடன் கூடிய நிலையான ஜனநாயகப் பாதையில் செல்லும் நாடாக இலங்கையை கருதுவதற்கு முன்னர், மேலும் பல சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுவதாக, நீதிபதிகள், சட்டவுரைஞர்களின் சுயாதீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மொனிக்கா பின்டோ, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்குக் கூறியுள்ளார். தனது, அண்மைய இலங்கை விஜயம் தொடர்பாக, அடுத்த வருடம் ஒரு விரிவான அறிக்கையை முன்வைக்கப்போவதாக, தற்போது நடைபெறும், மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் கூறினார். ‘சித்திரவதைகள் மற்றும் கேவலமான நடவடிக்கைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் யுவான் ஈ மென்டெஸ{டன், இலங்கை நான் சென்றிருந்தேன். எனக்கு அங்கு நல்ல வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைத்தது. அதற்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். எனது அறிக்கையைத் தயாரிக்கும் போதும், நான் எமது கலந்துரையாடல்களைத் தொடர விரும்புகிறேன்’ எனக்; கூறினார். வரலாற்றின் முக்கிய கட்டத்தில் இலங்கை உள்ளது. ஜனவரி மற்றும் ஆகஸ்டில் இடம்பெற்ற தேர்தல்கள், ஜனநாயகத்தின் வழிகளைத் திறந்து விட்டன. இதைத் தொடர்ந்து, நல்ல சில திருத்தங்கள் ஏற்பட்டன. அரசியலமைப்புச் சபை மீள நிறுவப்பட்டது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புத்துயிர் ஊட்டப்பட்டது’ என அவர், இலங்கை சென்று திரும்பியபோது, கூறியதை நினைவூட்டினார். ‘ஆயினும், இலங்கையை, சட்டத்தின் ஆட்சியுடன் கூடிய நிலையான ஜனநாயகப் பாதையில் செல்லும் நாடாகக் கருதுவதற்கு முன்னர், மேலும் பல திருத்தங்கள் தேவையாக உள்ளன. அடிப்படைச் சீர்திருத்தங்களுக்கான உற்சாகம், தொய்ந்து போய்விட அனுமதிக்கக் கூடாது’ என அவர் கூறினார். அண்மைய கடந்த காலத்தைக் கையாளத் தேவையான இடைக்கால நீதி முறைமையை அமைத்துக்கொள்ள இலங்கை, கஷ்டமான ஆனால் அவசியமான பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இடைக்காலப் பொறிமுறையில் தொடர்புபடும் நீதிபதிகளின் தகைமை, பாராபட்சமின்மை, சுயாதீனம் பற்றிக் கவனித்தல் வேண்டும். இது, மீண்டும் நடக்காது இருப்பதை உறுதி செய்யும்’ என அவர் கூறினார். தனது சுற்றுப் பயணத்தின் இறுதியில் விடுத்த அறிக்கையின் பரிந்துரைகளையிட்டு இலங்கை கடுமையாக சிந்திக்க வேண்டும் என பின்டோ, இலங்கையை வலியுறுத்தியுள்ளார். மேலும், சர்வதேச சமூகத்துடனும் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை இந்த விடயங்களையிட்டு நல்லுறவைப் பேண வேண்டுமென மொனிக்கா பின்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.