துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைப்பு-

thuraiyappaஇந்திய அரசாங்கத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து (டிஜிட்டல் காணொளி ஊடாக) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்துள்ளார். இன்று திறந்துவைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டு அரங்கில் முதல் நிகழ்வாக யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்குபற்றும் விசேட யோகா நிகழ்வொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வுகளில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே.சிங்ஹா, யாழ். இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன், முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். வடமாகாணத்தின் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், மற்றும் இளையோரின் மேம்பாட்டை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கத்தினால் 145மில்லியன் ரூபா செலவில் துரையப்பா விளையாட்டரங்கின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் இராணுவ வாகனம் மோதி தாய் உயிரிழப்பு, மகள் படுகாயம்-

ssdssயாழ். நகரப்பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் திருமண வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை மகள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்கு செலுத்திய போது, வேகமாக வந்த இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. தாய் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மகள் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிவராசா சவுந்திரராணி என்ற தாயே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதோடு, சங்கீதா என்ற 23 வயதுடைய மகளே படுகாயமடைந்துள்ளார். குறித்த இருவரும் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், இராணுவ தண்ணீர் பவுசரின் பின்புற சில்லில் சிக்குண்டு நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உதய கம்மன்பில கைதாகி விளக்கமறியலில் வைப்பு-

udayaபொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று காலையே தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நுகேகொட, பாகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உதய கம்மன்பிலவிடம் விசாரணை இடம்பெற்று வந்தது. இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதய கம்மன்பில இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட, பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உதய கம்மன்பில எம்.பி கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை அகதிகள் தரைக்கு வருவதற்கு அனுமதி-

760113355Refugee (1)இந்தியாவின் தமிழகத்தில் இருந்து சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்ட 44 இலங்கை தமிழ் அகதிகளையும் இந்தோனேசியாவின் ஆச்சே மாநில அதிகாரிகள் தரைக்கு வர அனுமதி வழங்கியுள்ளனர். சர்வதேச அளவில் கண்டனங்கள வெளியானதை அடுத்து, இந்தோனேசியாவின் ஆச்சே மாநில அதிகாரிகள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர். 44 இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற வேளை படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக படகில் இருந்த இலங்கை அகதிகளை தரைக்கு வர ஆச்சே மாநில அதிகாரிகள் அனுமதி மறுத்து வந்தனர். அப்படகில் ஒரு கர்ப்பிணிப் பெண், 9 சிறுவர்கள் உட்பட 44 பேர் இருந்துள்ளனர். படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரை சரி செய்த இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களை மீண்டும் தமிழகத்துக்கே கடல்வழியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததையடுத்து சர்வதேச அளவில் எதிர்ப்புக்கள் கிளம்பின. இதனையடுத்து இலங்கை அகதிகளை கரைக்கு வர அதிகாரிகள் இன்று அனுமதித்துள்ளதுடன், அவர்கள் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். படகில் வந்த அகதிகளை கரைக்கு வர அனுமதிக்குமாறு இந்தோனேசிய துணை ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம்-மன்னிப்புச்சபை-

sadasdassஇந்தோனேசியா கடற்பகுதியிலிருந்து இலங்கை அகதிகளை கரையிறங்கவிடாமல் வானை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூட்டை நடத்தியமை நீதியை மீறும் செயல் என்று சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை குறித்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் பயணித்தவர்கள் படகு பழுதடைந்ததன் காரணமாக இந்தோனேசியா கடற்பகுதியில் தஞ்சம் புகுந்திருந்தனர். இதன் காரணமாக இலங்கை அகதிகளை கரையிறங்க விடாமல் இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் வானை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூட்டை நடத்தியிருந்தனர். இதனடிப்படையில் குறித்த செயல் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எனவும், குறித்த இலங்கை அகதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என மன்னிப்பு சபையின் தென்னாசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோசெப் பெனடிக்ட் இந்தோனேசிய அதிகாரிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி, பிரதமருக்கு வலி.வடக்கு மக்கள் கடிதம்-

maithri ranilகடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். எனினும், எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் அவர் கூறிய ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடனிருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏமாற்றம் தந்துவிடாதீர்கள் என வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாகவுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் 87 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் எம்மை மீள்குடியமர்த்த அரசு தவறியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களுக்கு (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனக்கு) வாக்களித்தோம். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தருவீர்கள் என நம்பினோம். நீங்கள் ஜனாதிபதியாக வந்து ஒன்றரை வருடங்களாகியும் பெரியளவில் எந்த மாற்றத்ததையும் காண முடியவில்லை. கடந்த டிசம்பர் மாதம் -21ம் திகதி எமது நலன்புரி முகாமுக்கு வந்த நீங்கள் ஆறு மாதங்களில் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தீர்கள். அதனை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். நீங்கள் அவ்வாறு கூறியிருந்த காலம் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. நீங்கள் குறிப்பிட்ட ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்யத்தவறின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலையைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. தயவுசெய்து எம்மை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்.

2013 ஆம் ஆண்டு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் முன்பாக நடத்தப்பட்ட உணவுத் தவிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களிடம் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க கூட தான் ஆட்சிக்கு வந்தால் அனைவரையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். அவர்கூட இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. முகாம்களிலுள்ள எமது மக்களின் நிலை பரிதாபகரமானது. 15 அடி நீளம், 16 அடி அகலம்கொண்ட ஒரு கொட்டகைக்குள் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் வசிக்க வேண்டியுள்ளது. மிருகங்கள் போல் வாழவேண்டிய நிலையே உள்ளது. உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலுமிருந்து நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நாய்க்குட்டி காவுவதைப் போல ஒவ்வொரு இடமாகவும் ஒவ்வொரு பாடசாலைகளுமாக மாறி எமது நிலை காட்டு வாசிகளின் நிலைக்கு மாறியுள்ளது. சொந்த இடத்தில் வாழ விடுங்கள் என்றே நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். எமது நிலையைக் கருத்தில்கொண்டு முற்றுமுழுதாக மீள்குடியேற்றத்தைச் செய்வீர்கள் என நம்புகின்றோம் என்று மேலும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.