யாழ். வரணி பகுதி பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்-

jailயாழ்ப்பாணம் வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரும் நான்கு ஆசிரியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்விகற்கும் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நேற்றுமாலை ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் முதலாம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் வைத்து குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரும், சம்பவத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் அதிபர் உள்ளிட்ட ஏனைய மூன்று ஆசிரியைகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது, மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் 45வயதான ஆசிரியர் ஒருவர், அங்கு கல்வி கற்கும் 12வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். இதையடுத்து, பெற்றோர் பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் வினாவியபோது, இந்த விடயத்தை இத்துடன் விடுமாறும், அதுவே நல்லது எனவும் வெளியில் தெரியப்படுத்தவேண்டாம் எனவும் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் பெற்றோரை அச்சுறுத்தும் பாணியில் கூறியுள்ளனர். இந்த விடயத்தை அறிந்த பிரதேசவாசியொருவர், சாவகச்சேரி சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, நடவடிக்கை எடுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இச்சம்பவத்துக்கு உடந்தையாகவிருந்த 3 ஆசிரியைகளையும் பொலிஸார் கைதுசெய்தனர். கைதானவர்களை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.