மட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு-

fffமட்டக்களப்பு கொக்குவில் பகுதி காணியொன்றிலிருந்து நேற்றிரவு பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொக்குவில் பொலிஸ் காவலரணுக்கு அருகில் உள்ள குறித்த காணியில் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் இருந்துள்ளன. இதன்போது, ரி 56 துப்பாக்கிகள் 04, மகசின்கள் 08, ரி-56 துப்பாக்கிகளுக்கான ரவைகள் 210 என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக மனுத் தாக்கல்-

arjun mahendran (2)அர்ஜூன மகேந்திரன் மத்திய வங்கி ஆளுனர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கெபே அமைப்பினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். அர்ஜூன மகேந்திரன் இந்த நாட்டுப் பிரஜை இல்லை எனவும், அவரை அப் பதவியில் நியமித்தது சட்ட ரீதியானது அல்ல எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பிணை முறி மோசடி தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கீர்த்தி தென்னக்கோன், அவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே அர்ஜூனவை தொடர்ந்தும் மத்திய வங்கி ஆளுனர் பதவியில் நீடிப்பதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கீர்த்தி தென்னக்கோன் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்மாலோக்க தேரர் பிணையில் செல்ல அனுமதி-

dammaloka theroசட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட உடுவே தம்மாலோக்க தேரரை, பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னர் விடுக்கப்பட்ட நோட்டிசுக்கு அமைய இன்று, தம்மாலோக தேரர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன்போது, சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி அவரை 100 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னதாக குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தம்மாலோக தேரரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தது.

மொஹமட் முஸாமில் கைதாகி விளக்கமறியலில் வைப்பு-

musamilதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலக வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதான மொஹமட் முஸாமிலை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.