முள்ளியவளை வடக்கில் மூத்த பிரஜைகள் கௌரவிப்பு-
முல்லைத்தீவு – முள்ளியவளை வடக்கில் மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று, நேற்று இடம்பெற்றது. இதன்போது, சுமார் 50 மூத்த பிரஜைகள் கௌரவிக்கப்பட்டனர். மூத்த பிரஜைகளின் மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், மூத்த பிரஜைகள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு, அவர்களுக்கு சில போட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், பிரதேச செயலாளர் குணபாலன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆணைக்குழுவின் ஆயுட் காலத்தை நீடிக்கவும்-மெக்ஸ்வெல் பரணகம-
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழுவின் காலம் ஜூலை 15ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் இன்னும் 1 வருடகாலத்துக்கு ஆணைக்குழுவின் ஆயுளை நீடிக்குமாறு அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
லசந்த, எக்னெலிகொட விவகாரத்துக்கு நீதிமன்றங்களை அமைக்க முடிவு-
ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவ, இரண்டு ஆரம்ப கட்ட விசாரணை நீதிமன்றங்களை அமைக்க இராணுவம் தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான சில ஆவணங்கள் காணமல் போயுள்ளதாக, இது தொடர்பில் இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரும் சில ஆவணங்களை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படும் குற்றச்சாட்டை இராணுவம் இந்த அறிக்கையில் மறுத்துள்ளது.
குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைப்பு-
கல்கிஸை, விசேட குற்ற விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி குணரத்னவை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
தெஹிவளையில் வசிக்கும் பெண்ணொருவரிடம் 20 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொறுப்பதிகாரி குணரத்ன, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
களனி பகுதி மக்களை அங்கிருந்து அகற்ற தீர்மானம்-
களனி கங்கையின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டது.
இதற்கு அமைவான வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க கூறினார். மீண்டும் வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.