வவுனியாவில் பிரபல வர்த்தகர் கடத்தல்-

sfdfவவுனியா கோவில்குளம் இராணி மில் ஒழுங்கையில் வைத்து நேற்றிரவு 7.15 மணியளவில் பிரபல வர்த்தகரான எஸ்.எஸ்.ஆர். என அழைக்கப்படும் சண்முகம் செல்வராசா என்பவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரிசி ஆலை உட்பட வர்த்தக நிலையங்களை வவுனியா நகரில் நடத்திவரும் இவர் நகர்ப்பகுதியில் இருந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயமே வீட்டின் அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். வாகனமொன்றில் வந்தவர்களாலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் பொலிஸார் விரைந்து செயற்பட்டு வவுனியாவில் இருந்து வெளியில் செல்லும் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தொப்பியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் தலைக்கவசம் வீதிக்கருகில் காணப்பட்ட சிறிய கால்வாய்க்குள் காணப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்-

samurdhiவவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா கலபோகஸ்வௌ என்ற பிரதேசத்தில் வைத்து, கடந்த 16ஆம் திகதி சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். பிரதேச செயலகததில் இருந்து பிரதேச செயலக சந்தி வரை உர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மீண்டும் பிரதேச செலயகத்திற்கு சென்றனர். இதன்போது, சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், பல கோரிக்கைகளை உள்ளடக்கியும் பிரதேச செயலரிடம் மகஜர் கையளித்தனர்.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள்-

housing scheme (2)தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் உச்சபட்டி முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 13 பேருக்கு புதிய வீடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நேற்று வழங்கினார். திருமங்கலம் அருகே உச்சபட்டி அகதிகள் முகாமில் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1610 பேர் வசித்து வருகின்றனர். 1992-ம் ஆண்டு முதல் இங்கே தங்கியிருக்கும் பெரும்பாலான குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் சில வீடுகளில் 10க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 1.20 இலட்சம் இந்திய ரூபாயில் முதல்கட்டமாக 19 வீடுகள் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் 13 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை பயனாளிகளிடம் வழங்கினார் என கூறப்படுகிறது.

மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட ஆசிரியர் கைது, அதிபர் தலைமறைவு-

zxsdsdsயாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பெரியபுலம் மகாவித்தியாலய மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் ஆசிரியரை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவத்தை மூடி மறைத்ததாக கூறப்படும் குறித்த பாடசாலையின் அதிபர் தலைமறைவாகியுள்ளார். மாணவிகள் மீது ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அதிபர் அதனை மூடி மறைக்க முயன்றதாக பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் தெரிவித்து இன்றுகாலை பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்றும், சம்பவத்தை மூடிமறைத்த அதிபரை பதவிநீக்கம் செய்யவேண்டுமெனவும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு ஆசிரியரை கைதுசெய்யக்கோரியும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் ஆசிரியரை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ள அதிபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மற்றைய ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லைகா மொபைல் நிறுவன பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது-

likaசர்வதேச அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும் 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மில்லியன் பவுன் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் லைகா மொபைல் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வரி ஏய்ப்பின் அளவு 13 மில்லியன் பவுன்களுக்கும் அதிகம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் நம்புகின்றனர். பல்வேறு வழிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிலிருந்து பல கோடி பவுன் பணம் லண்டன் தபால் நிலையங்கள் மூலம் பரிமாற்றப்படுவதைக் கண்காணித்துக் கண்டுபிடித்ததாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த 2011ம் ஆண்டு முதல் பிரித்தானியப் பிரதமரின் கட்சிக்கு 2.2 மில்லியன் பவுன்கள் நிதி வழங்கியுள்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நிறுவனம் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகளை போலியான பற்றுச்சீட்டுக்கள் மூலம் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உலகில் பாரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் லைகா மொபைல் சர்வதேச அளவில் உள்ள தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்.

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு-

vithya kolaiபுங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்குஅச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை 5ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்பேரில் வித்தியா கொலைவழக்கு சந்தேகநபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை மன்றில் முன்னிலைப்படுத்தியபோது இன்றுவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சந்தேகநபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஆர்.சபேசன், சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு விண்ணப்பம் செய்தார். பிணை மனுவை நீதிவான் எம்.எல்.றியால் நிராகரித்ததோடு, வித்தியா கொலை வழக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கு என்பதால் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க முடியாது எனவும், மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறும் தெரிவித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.