யாழில் 2லட்சம் போலி நாணயத்தாள் விவகாரமாக பெண் கைது-
யாழ்ப்பாணத்திலுள்ள வங்கியொன்றில் 2லட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று தனியார் அச்சகத்தில் தொழில்புரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் காலை இளவாலைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருமண செலவுக்காக மானிப்பாயிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று 17 பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கியிலிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்தச் சென்றபோது அதில் சுமார் 2 லட்சம் ரூபா போலி நாணயத்தாள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக குறித்த தரப்பினரால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தலமையில் இளவாளை பொலிஸார், குறித்த வங்கி அதிகாரிகளிடமும் முறைப்பாட்டை செய்தவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பான மேலதிகமான பூரண விசாரனைகளை மேற்கொள்வதற்காக இவ் வழக்கை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார். இதையடுத்தே இன்று யாழ்ப்பாணத்தில் தனியார் அச்சகத்தில் தொழில் புரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.