வலி வடக்கில் 201.3 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-

erwtrயாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொதுமக்களின் 201.3 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடுவிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். வலி.வடக்கில் உள்ள ஜே-233, ஜே-234, ஜே235, ஜே-236, குரும்பசிட்டி (ஜே-238), கட்டுவன் (ஜே-242), மற்றும் வறுத்தலை விளான் (ஜே-241) (ஜே-238) ஆகிய பகுதிகளில் உள்ள 201.3 ஏக்கர் காணிகளே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் விடுவிக்கப்பட்டன. காங்கேசன்துறை பகுதி விடுவிக்கப்படுகின்றமையால் காங்கேசன்துறை புகையிரத நிலையம், மக்கள் பாவனைக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வறுத்தலை விளான் பகுதியில் முன்னர் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்த 12 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை யாழ்ப்பாணம் செல்லும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மேலும் விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாக ஆராய்வதற்கான, கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபடவுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் பாதுகாப்புகளின் நிமித்தம் சகல காணிகளையும் விடுவிப்பது சாத்தியமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று யாழ் காங்கேசன்துறையில் இடம்பெற்ற காணி விடுவிப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறும் போது, முப்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இன்று காணிகள் விடுவிக்கப்பட்டதைப்போன்று இன்னும் சில தினங்களிலும் சில காணிகளை விடுவிக்கவுள்ளோம். விடுவிக்கப்படுவதற்கு ஏதுவான காணிகளை அடையாளம் கண்டு தொடர்ச்சியாக அதை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்கு நீண்ட நாட்கள் ஆகாது என நான் நினைக்கின்றேன். பாதுகாப்பின் நிமித்தம் சில காணிகளை விடுவிப்பது சாத்தியமற்று உள்ளது. எத்தனை ஏக்கர் அவ்வாறு விடுவிக்க முடியாமல் போகும் என்பது குறித்து இன்று என்னால் கூறமுடியாது. அவ்வாறான காணிகளின் உரிமையாளர்களிற்கான இழப்பீடுகள் நிச்சயம் வழங்கப்படும். யாழ் மாவட்டத்தில் ஒருகாலத்தில் 29ஆயிரம் ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிம் இருந்தது. ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை விடுவிக்கப்பட்டு மூவாயிரம் ஏக்கர் காணிகளே இன்று விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே பாதுகாப்பு தேவைகளை தவிர்த்து ஏனைய சகல காணிகளையும் விடுவிக்க நாம் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.