பாலியல் துஷ்பிரயோகங்களைக் கண்டித்து சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்-

sdfsdfsயாழ். தென்மராட்சி வரணி பிரதேசத்திலுள்ள கல்லூரி ஒன்றில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கும் சாவகச்சேரியிலுள்ள தேசியப் பாடசாலை ஒன்றின் மாணவன் தாக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, நீதி கிடைக்கக் கோரி தென்மராட்சி பிரதேச வாழ் மக்களால் சாவகச்சேரியில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. கவனயீர்ப்புப் போராட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டிருந்தவர்கள் ‘அவதானம்! அவதானம்! பிரத்தியேக வகுப்புத் தொடர்பில் அவதானம், ‘அச்சுறுத்தாதே! அச்சுறுத்தாதே! சிறுவர் உரிமைகளைக் தட்டிக்கேட்கும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தாதே!,’ ‘வேலியே பயிரை மேய்வதா?’, ‘கைதுசெய்! கைதுசெய்! காவாலி ஆசிரியர்களைக் கைதுசெய்! அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பு,’ ‘சிதைக்காதே! சிதைக்காதே! மலரும் மொட்டுக்களைச் சிதைக்காதே!’ போன்ற வாசகங்களைத் தாங்கிச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்கள் இன்று காலை 11 மணியாவில் சாவகச்சேரி பேரூந்து தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பித்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனையைச் சென்றடைந்து அங்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமாரிடம் மனுவொன்றைக் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து பேரணி, தென்மராட்சிப் பிரதேச செயலாளர் அ.சாந்தசீலனிடம் இரு மனுக்களை கையளித்ததுடன், அரச அதிபருக்கான மனுவும் கையளிக்கப்பட்டது. கடந்த வாரம் வரணிப் பிரதேசத்திலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின் சிறுமி அதே பாடசாலையின் ஆசிரியரால் பிரத்தியேக வகுப்பின்போது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் தகவல் தெரிந்தும் அதனை மறைத்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் உள்ளிட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாவகச்சேரியிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மாணவன் ஒருவனை காதைப் பொத்தித் தாக்கியதால் செவிப்பறை கிழிவடைந்த நிலையில் குறித்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான். இவற்றுக்குக் கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டுள்ளது.