மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்-

fwrewrerதமது மீள்குடியேற்றதை துரிதப்படுத்த வலியுறுத்தி, யாழ் நல்லூர் கோயில் முன்றலில் வலி வடக்கு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 15.06.1990ம் ஆண்டில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குறித்த மக்களின் இன்னல்களை நேரில் கண்டறிந்த ஐனாதிபதி, “06 மாதங்களுக்குள் உங்களை மீளக்குடியேற்றுவேன்..” என வாக்குறுதியளித்த நிலையில், அது இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8அம்ச கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஐனநாய கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் எனப் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இது குறித்த மகஐர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் வடமாகாண ஆளுனருக்கும், மாகாண முதலமைச்சர் மற்றும் மனித உரிமைகள் காரியாலத்திலும் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திலும் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ஆணைக்குழு மஹிந்தானந்தவுக்கு அழைப்பு-

mahindananthaமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கம பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அவசர வேலைகள் நிமிர்த்தம் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாதுள்ளதாக அவர் சட்டத்தரணி ஊடாக தெரியப்படுத்தியுள்ளார். இதன்படி, அவர் நாளை காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில், ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற அரச சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் பொருட்டு வாக்கு மூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

யாழில் திருமண வீட்டிற்குள் புகுந்து கொள்ளை-

robberyயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் திருமண வீடொன்றில் இருந்து 7 இலட்சம் ரூபா பணம் மற்றும் 35 பவுண் நகை ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீடு மணப்பெண்ணுடைய வீடாகும். இந்நிலையில் அன்று இரவு வீட்டில் இருந்தவர்கள் சம்பிரதாயங்களின்படி மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் ஒரு சிலரே தங்கியிருந்தனர். இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவ் வீட்டினுள் நூழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த 35 பவுண் நகை, 7இலட்சம் ரூபா பணம் மற்றும் திருமண வீட்டிற்கு வந்தவர்கள் மணமக்களுக்கு வழங்கிய அன்பளிப்பு பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்தவர்கள் காலையே அறிந்துள்ளதுடன் வீட்டின் பின்புறமான கதவு வழியாகவே கொள்ளையர்கள் உள் நூழைந்துள்ளமையை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

நீதிபதிகளை அவதூறு செய்யும் இணையத்தளங்கள்மீது சட்ட நடவடிக்கை-

websitesநீதிபதிகள் தொடர்பில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென சட்டத்தரணிகள் சங்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீதிபதிகள் தொடர்பிலும் மிகவும் தகாத முறையில் அவர்களது கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் திலின கமகேவுக்கு பிணை வழங்கிய நீதிபதி தொடர்பில் தகாத முறையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதில் அவர் மலேசியாவிற்கு சென்றிருந்ததாகவும் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஒரு முறையேனும் மலேஷியாவுக்குச் சென்றிருக்கவில்லை என்பதே உண்மையாகும். நீதிபதிகளை அச்சுறுத்தி தமக்கு சாதகமாக தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முனையும் ஒரு சாரார் செயற்படுவதால் நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தை தெளிவுபடுத்தினோம். இவற்றைப் பெற்றுக்கொண்டு நாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்” என்றார்.

மட்டக்களப்பு தீ விபத்தில் வாகனங்கள் எரிந்து நாசம்-

fireமட்டக்களப்பு பிள்ளையாரடியில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்று, இன்று தீப்பிடித்து எரிந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று நண்பகல் 12.00 மணியளவில் அந்த இடத்தில் வைத்து வேன் ஒன்றை திருத்திக் கொண்டிருந்தபோது, அது தீப் பிடித்துள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களும் அங்கு வேலை செய்தவர்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். இதனால் குறித்த வாகனம் திருத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வேன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு வாகன இயந்திரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மேலும், இதனால் சுமார் 35 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில், குறித்த கடையின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சஜின்வாஸ் குணவர்தன கைதாகி பிணையில் விடுவிப்பு-

sachin vassஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வர்த்தகர் ஒருவரின் நிதியை பலவந்தமாக தன்னகத்தே வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் 5ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி சட்டத்தின் கீழ், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரை அச்சுறுத்தி 60 கோடி ரூபாய் பணத்தை காசோலை மூலம், சஜின்வாஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறினர். எனினும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த குற்றச்சாட்டை நிராகரித்தார். விடயங்களை ஆராய்ந்த நீதவான் அடுத்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜப்பானிய குழு-

fdfகிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று ஜப்பானிய குழுவினர் பார்வையிட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர், ஜப்பானிய நிதியுதவியுடன் ‘டாஸ்’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர். குறித்த பகுதியில் மீட்கப்பட்ட கண்ணிவெடிகள் தொடர்பில் விளக்கமளிக்கபட்டதை அடுத்து, கண்ணிவெடி அகற்றம் முறை தொடர்பில் குறித்த குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணி வெடி அகற்றப்படும் பகுதியை நேரில் சென்று ஜப்பானிய குழுவினர் பார்வையிட்டமை இங்கு குறிப்பிடதக்கது.

போதைப் பாவனைக்கு எதிராக மன்னாரில் ஊர்வலம்-

sdffdsfdபோதைப்பொருளற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணி இன்றுஇடம்பெற்றுள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மன்னார் திருப்புமுனை மையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை, புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து குறித்த விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர். மாணவர்கள் பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் பிரதான வீதி ஊடாக, மன்னார் நகர மத்திய பகுதியில் ஒன்றுதிரண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செலின் சுகந்தி செபஸ்தியான், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ, மன்னார் திருப்புமுனை புதுவாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை கியுபட் அடிகளார், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ. அந்தோனி மார்க் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதம்-

27-6-2016 13.6.45 1 (1)வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மையத்திய நிலையத்தினை வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்குமாறு கோரி வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் இன்றுகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனை சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுவரும் இந்த உண்ணாவிர போராட்டத்தில், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர்கள், விவசாயிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சிவமோகன், கே. கே. மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினரான ஏ. ஜெயதிலக, சிறிடெலோ கட்சியின் செயலாளர் நாயகம் கா.உதயராசா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான இடத்தினை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.