கடத்தப்பட்டதாக கூறப்படும் குடும்பஸ்தர் எரிகாயங்களுடன் மீட்பு-

dfgdfgdfமன்னார், பள்ளிமுனையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி (வயது 38), நொச்சிக்குளம் பகுதியில் வைத்து எரிகாயகாயங்களுடன் நேற்றிரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேற்படி நபர், உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் நேற்று முன்தினம் அதிகாலை கடத்தப்பட்டதாக அவரது மனைவி, மன்னார் பொலிஸ் நிலையத்தில் அன்றையதினம் இரவே முறைப்பாடு செய்துள்ளார். உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் கடமையாற்றி வந்த அவர், ஆலய பங்குப் பணிமனையில் வைத்து புதன்கிழமை அதிகாலை 2.30க்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். புலனாய்வுத்துறையினர் என தங்களை அறிமுகப்படுத்திய சிலர், மன்னார் பள்ளிமுனையிலுள்ள அவரது வீடடுக்குச் சென்று அண்மைகாலமாக அச்சுறுத்தல்களை விடுத்து வந்துள்ளனர். கடந்த முதலாம் திகதியும், இவ்வாறே அவ்வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர். அன்று அவர் வீட்டில் இருக்கவில்லை. எனினும், இனந்தெரியாத நபர்கள், 19ஆம் திகதி மீண்டும் வருவோம் என கூறிச் சென்றுள்ளர். இவை தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு அண்மையில் கொண்டு சென்றிருந்தார். கணவன் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக அவரது மனைவி தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இந்நிலையில் மேற்படி நபர் கண் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு நொச்சிக்குளம் கிராம பகுதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது அபாயக்குரலை செவிமடுத்த சிலர், உடனடியாக உயிலங்களம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் எரிகாயங்களுடன் காணப்பட்ட குடும்பஸ்தரை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.